செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று (08.08.2012) காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் பிளாஸ்டிக் பையை மறைத்தபடி அமர்ந்திருந்தார். திடீரென பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பையை வாங்கிப் பார்த்த போது தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டனர். இதுபற்றி அவரிடம் கேட்ட போது எனது குழந்தை தான். முறை தவறி பிறந்துள்ளது யாருக்காவது வளர்க்க விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பயணிகள் அவரை கண்டித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர் குழந்தையை பையில் சுற்றி ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றார். அப்போது அருகில் அமர்ந்திருந்த மனித உரிமைகள் கழகத்தை சேர்ந்த ஊரப்பாக்கம் லட்சுமி ரகுராம் மற்றும் பயணிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர்.
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் தயாராக நின்ற போலீசார் அந்த பெண்ணையும் குழந்தையையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து குழந்தையுடன் அவரை எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்பெண் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சித்ரா (36) என்பது தெரிந்தது.
15 ஆண்டுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்ததால் நேற்று இரவு எனக்கு குழந்தை பிறந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் செங்கல்பட்டு வந்து தாம்பரம் மின்சார ரெயிலில் ஏறினேன். குழந்தையை வீசி கொல்ல முயலவில்லை என்று சித்ரா கூறினார்.
விசாரணை நடந்து கொண்டிருந்த போது மனித உரிமைகள் கழக மகளிர் அணி அமைப்பாளர் கல்பனா, மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது ஆவேசம் அடைந்த கல்பனா பிறந்த குழந்தையை பாலித்தீன் பையில் எடுத்து வரலாமா? என்று கூறி சித்ரா கன்னத்தில் ஓங்கி அறைந்தார் இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மனித உரிமை அமைப்பு நிர்வாகிகள் சித்ராவையும், குழந்தையையும் தாங்கள் கவனித்து கொள்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் சித்ராவை போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக