புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொலை, கொள்ளையில் ஈடுபட்டவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் 16 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது. தனிமையில் இருந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து ஒரு
லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்த குற்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் தீர்ப்புக்காக நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பில் தனிமையில் வசித்து வந்த பூலோகம் பூமணி (வயது84) என்பவரே கொலைசெய்யப்பட்டார். அவரிடம் இருந்த தங்க நகைகள் உட்பட ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதி யான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

2008 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டில் பண்டத்தரிப்பு காலையடியைச் சேர்ந்த ஈஸ்வரன் பிரகாஸ் என்பவர் மறுநாள் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

அதனால் எதிரி சார்பில் வாதாட அரச செலவில் சட்டத்தரணி மேனகா நியமிக்கப்பட்டார். வழக்கு விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களை முன்னர் அரச சட்டவாதியான  வி.திருக்குமரன் நெறிப்படுத்தியிருந்தார். பின்னர் வழக்கு எதிரி தரப்பில் விளக்கத்துக்காக எடுக்கப்பட்டது. எதிரி சாட்சிக்கூண்டுக்குள் வந்து சாட்சியமளித்திருந்தார்.

தான் கொலை செய்யவில்லை என்றும் கொள்ளையடிக்கவில்லையென்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார். அவரை அரச சட்டவாதி செல்வி நளினி கந்தசாமி குறுக்குவிசாரணை செய்திருந்தார். கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பிள்ளைகள் திருமணமாகி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதனால், மூதாட்டி தனித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

தொடர் விளக்கத்தின் பின்னர் கடந்தவாரம் தொகுப்புரை இடம்பெற்று வழக்குத் தீர்ப்புக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் தீர்ப்பை ஆணையாளர் அறிவித்தார்.

“கொலைக் குற்றச்சாட்டில் எதிரி தண்டனைச் சட்டக்கோவையின் 297 ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றத்தைப் புரிந்துள்ளார் என மன்று கருதுவதால் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

“கொள்ளையடித்த குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அந்தக் குற்றத்துக்கும் 8 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இரண்டு தண்டனைகளையும் எதிரி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று மேல் நீதிமன்ற ஆணையாளர் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top