இந்தியாவில் கைத்தொலைபேசியில் படம் எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த இளம்பெண்
செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த இளம்பெண் சீதா (பெயர் மாற்றம்). பிளஸ்2 முடித்து விட்டு, லேப் டெக்னீசியன் படிப்புக்காக விண்ணப்பித்திருந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (19). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரி மாணவர். இவரும் சீதாவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். பின்னர் சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சீதா அவரை விட்டு விலக தொடங்கினார்.
அவரிடம் பேசாமல் தவிர்த்து வந்தார். இதனால் சரத்குமார் ஆத்திரம் அடைந்தார். செல்போனில் சீதாவை படம் எடுத்து அதனுடன் தனது படத்தை இணைத்து மார்பிங் செய்தார். தன்னை காதலிக்காவிட்டால் படத்தை எல்லோரிடமும் காட்டி விடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.
செல்போனில் உள்ள படத்தை அழித்து விடும்படி சீதா பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால் சரத்குமார் கேட்கவில்லை.
இந்தநிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் சரத்குமார் தனது செல்போனை நண்பர் ஏழுமலையிடம் (19) கொடுத்து, சீதாவிடம் சென்று தன்னை காதலிக்க வற்புறுத்துமாறு கூறியுள்ளார்.
அதன்படி ஏழுமலை, சீதாவிடம் சென்று, சரத்குமார் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். அவனை நீ காதலித்தே ஆக வேண்டும். இல்லை என்றால், செல்போனில் உள்ள படத்தை எல்லோரிடமும் காட்டி, உன் பெயரை கெடுத்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மகளின் அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் பதறியடித்து ஓடி தீயை அணைத்தனர்.
பலத்த தீக்காயமடைந்த அவரை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நேற்று வேலூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பதிவு செய்தார்.
இதுகுறித்து திமிரி பொலிசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், ஏழுமலையை கைது செய்தனர். ஏழுமலை, திமிரி அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஆவார்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அவர்களிடம் இருந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன