டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் இடம் பெற்றிருப்பதால், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மைனர் என்பதற்காக வயதை குறைக்கலாமா என்ற
பரிசீலனையில் உள்ளது.
இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு வரை 33 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மீது குற்றவழக்குகள் அந்தந்த மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர்.
ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்களை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்...
“சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2000ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் தான் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டது. இது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. மைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
என்று அந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் பாலுணர்வை தூண்டு வலைதளங்களே சிறுவர்களை குற்றவாளிகளாக்குகின்றன என்பதையும் மற்றொரு ஆய்வு காட்டுகிறது.
இது குறித்து மும்பையை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சர்வே ஒன்றை நடத்தினர். இந்த சர்வேயில் கிடைத்த முடிவுகள் வருமாறு...
10க்கு 8 குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், பாராட்டு போன்றவற்றை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் ஏங்கி தவிக்கின்றனர்.
இதுபோல பாதிக்கப்படும் குழந்தைகளில் பலர் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களை பார்க்கின்றனர்.
600 மாணவர்களிடம் நடத்திய சர்வேயில் 96 சதவீத மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியுள்ளனர். தங்களது உணர்வுகள், மகிழ்ச்சிகளை முகம் தெரியாத யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போதுதான் சில தவறான நபர்களின் சேர்க்கையில் மாணவ பருவத்திலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதில் 72 சதவீத பெற்றோருக்கு தங்களது குழந்தைகள் இது போல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர் என்பதே தெரியாமல் உள்ளனர். அவர்கள் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர்.
80 சதவீத குழந்தைகள் பெற்றோருடன் வெளியில் செல்வதை விட சாட்டிங் செய்வதையே விரும்புகின்றனர். 72 சதவீதம் பேர் தங்களது நண்பர்களுடனும், 78 சதவீதம் பேர் புதியவர்களுடனும் சாட்டிங் செய்வதை விரும்புகின்றனர்.
குழந்தைகளில் 87 சதவீதம் பேர், சமூக வலைதளங்களில் தங்களது உணர்வுகளை கொட்டுவதோடு தங்களது குடும்பம், பிரச்சினைகள் குறித்தும் தெரிவித்து விடுகின்றனர். இது பின்னாளில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
55 சதவீத குழந்தைகள் சமூக வலைதளங்களில் போலியான பெயர்களில் கணக்கு ஆரம்பித்து, சாட்டிங் செய்வது, இணைய தள பதிவிறக்கம் செய்வது என்று உள்ளனர்.
இதில் சில நேரங்களில் வகுப்பறையில் ஏற்படும் சிறிய கோபத்தின் போது கூட, கொலை செய்யும் அளவுக்கு இணைய தளங்களில் தகவல்களை சேகரிக்கின்றனர். இவ்வாறு அந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பணி நிமித்தமாக பல பெற்றோர்கள் குழந்தைகளோடு ஒட்டி உறவாடுவதில்லை. பெரும்பாலான குழந்தைகள் வேலைக்காரர்கள் மற்றும் விடுதிகளில் வளர்கின்றன.
குழந்தைகள் மனம் வாடக்கூடாது என்பதற்காக நவீன செல்போன், இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பதோடு தேவையான அளவு பாக்கெட் மணியையும் அளிக்கின்றனர்.
இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகள் மிக எளிதாக தவறு செய்ய தூண்டப்பட்டு சிறு வயதிலேயே குற்றவாளிகளாகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக