பேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கில் நிருபர்களை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் சூக்கர்பேர்க் இத்தகவலை வழங்கினார்.
இப்புதிய வசதி கூகுள் Search Engine க்கு போட்டியாக, கருதப்பட வாய்ப்பிருக்கின்றதா என கேள்வி எழுப்பிய போது, Graph Search வசதி அதனை ஒத்ததல்ல எனக் கூறினார் சூக்கர்பேர்க்.
இத்தேடுபொறியில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை மாத்திரம் இலகுவாக தொகுத்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறுகிறார். 'உதாரணமாக எனது பேஸ்புக் நண்பர்களிடையே கலிபோர்னியாவில் வசிப்பவர்கள் யார்? என ஓர் கேள்வியை எழுப்பினால், உடனடியாக அந்நண்பர்களின் பட்டியலை (Graph) தொகுத்து தருகிறது இவ்வசதி' என்கிறார்.
இதே போன்று உங்களது ஆயிரக்கணக்கான பேஸ்புக் நண்பர்களிடமிருந்து ஒரு பொதுவான விருப்பமுடைய நபர்களை சட்டென பிரித்து காட்டச்சொன்னால் இந்த Facebook Graph Search உதவி செய்கிறது.
இதுவரை அமெரிக்காவில் Beta வேர்ஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கின் இப்புதிய வசதி, இன்னும் சில மாதங்களில் உத்தியோகபூர்வமாக அனைத்து பேஸ்புக் பாவணையாளர்களிடமும் கொண்டுவரப்படவுள்ளது.
இவ்வாறு Graph Search Engine இல் காண்பிக்க முடியாத பதில்கள் இருக்குமாயின் மைக்ராசாப்ட்டின் Bing தேடுபொறி மூலம் பதில் தரவிளையும். இந்த புதிய வசதி எந்த விதத்திலும் வழமையான பேஸ்புக் பாவனையாளர்களின் Privacy Setting இல் அத்துமீறல் செய்யாது என உறுதியளித்துள்ள சூக்கர் பேர்க், எனினும் Privacy Setting இல் சில எச்சரிக்கை தகவல்களை தந்து, இந்த Graph Search Engine இல் தனிப்பட்ட உங்களது பேஸ்புக் புரொபைலை இணைப்பதற்கு அனுமதி கேட்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த Graph Search சேவைக்காக பேஸ்புக்கின் பாவனையாளடமிருந்து சுமார் 1 ட்ரில்லியன் இணைப்புக்கள் பொருத்தப்படவிருப்பதாக சூக்கர்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கின் இப்புதிய வசதி அறிமுகம் இணைய உலகில் இப்போது சூடுபிடித்துள்ளது. பேஸ்புக் ஏதோ ஒரு புதிய பிரமாண்ட வசதியை அறிவிக்க போகிறது என கடந்த சில வாரங்களாக யூகங்கள் வந்திகளாக பரவி வந்தன. ஸ்மார்ட்ஃபோனுக்கு பொருத்தமானதாக முழுமையான ஒரு இணைய தேடுதல் பொறியை அறிமுகப்படுத்தலாம் என சில வதந்திகள் பரவியிருந்தன. எனினும் இறுதியில் அவற்றையெல்லாம் பொய்ப்பித்துள்ளது இன்றைய சூக்கர்பேர்கின் அறிவிப்பு.
கடந்த 2012 டிசம்பர் மாதம் பேஸ்புக்கின் இங்கிலாந்து, அமெரிக்க பாவனையாளர்கள் ஆயிரக்கணக்கில் தமது அக்கவுண்டுக்களை Disactivate செய்திருந்தனர். இதனால் பேஸ்புக்கின் மீது வெறுப்பு ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்கள் புரளியை கிளப்பியிருந்தன. ஆனால் மறுமுனையில் இந்தியா, பிரேசில் பொதுமக்களின் பேஸ்புக் பாவணை அதிகரித்துவிட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.
இந்தியாவில் இப்போது இணையம் உபயோகிப்பவர்கள் 120 மில்லியனுக்கு அதிகம். இதில் 62 மில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் பாவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1.5 மில்லியன் பேர் புதிதாக பேஸ்புக் உபயோகிக்க தொடங்கியிருந்தார்கள். இந்நிலையில் பேஸ்புக்கின் இப்புதிய சேவை அறிமுகம் அதன் பாவனையாளர்களுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக