தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல்
ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் சிசேரியன் பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே தான். ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆம், சிசேரியன் பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள, கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* முதலில் சிசேரியன் பிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது தான்.
அவ்வாறு ஆப்ரேஷன் செய்வதால், வயிற்றில் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். பின் என்ன தான் செய்தாலும் போகாது. அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் ஆப்ரேஷன் செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது ஆப்ரேஷன் வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
* சுகப்பிரவத்தை விட சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது.
* பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக சிசேரியன் பிரசவத்திற்கு பின் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் சிசேரியன் பிரசவத்திற்கு பின் சரியான ஓய்வு எடுக்காவிட்டால், இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.
* ஒரு முறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலானோருக்கு முதல் முறை சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் இருந்ததில்லை. மேலும் மருத்துவர்கள் இரண்டாம் முறையும் சிசேரியன் என்றால், இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனெனில் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் சிசேரியன் செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும்.
* சிசேரியன் செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.