புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தின் போது பல சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை குடிப்பதால் ஏற்படும் உடல் நல பிரச்னைகளை விளக்கி சொல்கிறார்கள். கடந்த 1987ல் உலக சுகாதார நிறுவனம் மே 31ம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள்.

இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர்.

புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும்.

உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர்.

இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.

புகை பிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்று நோய், ஆஸ்துமா, காச நோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என்று பல நோய்கள் வருகின்றன. தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது.

புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப்பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரம்) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்கள். தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது.

ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்க கூடும். ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்.

புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும் அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.

அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர். இருமல், கை நடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகை பிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது. இளைஞர்களுக்கு புகை பிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது.

எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

பெரியோர் புகைப் பிடித்து விட்டு தூக்கி எறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் இளம் வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை. புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒன்றும் உலக மகா கஷ்டமான காரியமல்ல.

மனது வைத்தால் எல்லாம் முடியும். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம். வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை. மொத்தத்தில் புகையிலையை ஒழித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top