புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.



29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.

தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை.

ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ..விமான பயணத்துக்கு இடம் தரவில்லை.

அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. ‘அப்பென்டிஸைட்டிசிஸ்’ எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார்.

உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top