புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மின்சார ரயிலில் சென்றபோது காணமால்போன இளம்பெண் எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.


பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரனின் மகள் சுமதி(25). எம்.ஏ வரை படித்துள்ள சுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நெருங்கிய உறவினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி கோயிலுக்கு செல்வதாக செல்வதாக கூறிவிட்டு சென்ற சுமதி வீடு திரும்பவில்லை.

சுமதியை அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் வீடுகளில் அவரது பெற்றொர் தேடி பார்த்தும் எங்கும் அவர் இல்லை. இதையடுத்து சுமதி காணமால் போனதாக அவரது தந்தை ராஜேந்திரன் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுமதியை தேடி வந்தனர்.

எண்ணூர் கடலை ஒட்டி ஓடும் பக்கிங்காம் கால்வாயில் இளம்பெண் சடலம் ஒன்று கிடப்பதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீஞ்சூர் காவல்துறையினர் இளம்பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பொன்னேரி காவல்துறையினர் இளம்பெண் சடலம் ஒன்று எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது குறித்து சுமதியின் பெற்றொருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த சுமதியின் பெற்றோர் சடலத்தில் இருந்த ஆடைகளை கண்டு அது தனது மகள்தான் என உறுதி செய்தனர். இதையடுத்து பொன்னேரி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சுமதியும் வெள்ளோடை கிராமத்தை சேர்ந்த கார்த்திக்கை(26) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு நிச்சதார்த்தம் நடைபெற்றதையடுத்து சுமதி கார்த்திக்குடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து சுமதியிடம் கார்த்திக் செல்போனில் அவ்வப்போது தொடர்ப்பு கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 24 ஆம் தேதி கோயிலுக்கு சென்று விட்டு அன்றிரவு மின்சார ரயிலில் பொன்னேரி வந்து கொண்டிருந்த சுமதியிடம் கார்த்திக் செல்போனில் பேசியதாகவும் இதனை அடுத்து கார்த்திக் தன்னை தொந்தரவு செய்வதாக சுமதி தனது தந்தை ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மின்சார ரயில் எண்ணூர் பக்கிங்காம் கால்வாயின் மேல் சென்று கொண்டிருந்தபோது சுமதி ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததை கண்ட சகபயணிகள் இது குறித்து ரயில்வே காவல்துறைக்கு தெரியப்படுத்தி உள்ளனர். ரயில்வே காவல்துறையினர் ரயிலில் இருந்து கீழே குதித்த பெண்ணை தேடியும் சடலம் ஏதும் கிடைக்காததை அடுத்து திரும்ப சென்றுள்ளனர் என தெரியவந்தது. இது குறித்து கார்த்திக்கிடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top