புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொம்மலாட்டம் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் அன்னக்கொடி. எனினும் இத்திரைப்படம் வெளியான முதல் நாளே சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.


இத்திரைப்படத்தை தடை செய்யக் கோரி தேனியில்  உள்ள பாரதிராஜாவின் வீட்டை அகில இந்திய பார்வர்டு பிளாக் கடியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். 'அன்னக்கொடி' திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், சாதிக்கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பது போன்றும், கலப்பு திருமணம் செய்வது போன்றும், அடுத்தவர் மனைவியை கூட்டி வருவது போன்றும் காட்சி வருகிறது.

மேலும் 'ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய்விட்டார்கள், விஜயநகர பேரரசை சேர்ந்த தெலுங்கர்கள் இன்னும் இந்த நாட்டை விட்டு போகவில்லை' என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காட்சி வருகிறது. எனவே இந்தபடத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என அவர்கள் மனுவொன்றையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரதிராஜா வீடு மற்றும் 'அன்னக்கொடி' திரைப்படம் திரையிடப்பட்டு உள்ள திரையரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'அன்னக்கொடி' பட விவகாரம் பற்றி பாரதிராஜா கூறியதாவது:-

மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது.  இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது.  ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.

நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம்.  "ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே "கோவலனை கொண்டு வா" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, " கொன்று வா" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு. எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோலிவை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். நாம் வணங்கும் மூனுசாமிக்கும்,  முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் "அன்னக்கொடி" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் "அன்னக்கொடி" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.

சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
 
Top