புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத்தால் துரியோதனனை நட்பாக்கி கொண்டவன். பெயர் கர்ணன். அந்த மாவீரனை அனைவரும்
கொண்டாடியதும், அவன் அர்ஜூனனிடம், ஏ அர்ஜூனா! நீ மாபெரும் வீரன் என அனைவரும் கொண்டாடினர். இப்போது என்னைக் கொண்டாடுகின்றனர். இப்போது நடந்தது தனிப்பட்ட வித்தைப் பயிற்சி தான்! இப்போது, நீயும் நானும் நேருக்கு நேர் நின்று போர் செய்வோம். நம்மில் யார் வெற்றி பெறுகிறார் என்பதைக் கொண்டு போட்டியின் முடிவு அமையட்டும், என்றான். பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த துரியோதனனுக்கு கர்ணனின் இந்தப் பேச்சு அமுதமாய் இனித்தது. அவன் கர்ணனை வாழ்த்தினான். நண்பா! உன்னை வெல்ல வல்லவர் யார்? என்று அன்பு ததும்ப கூறி மார்போடு அணைத்துக் கொண்டான். அர்ஜூனனுக்கும் கோபம்! அடேய் கர்ணா! வெறும் வார்த்தைகள் போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது. என் அந்தஸ்துக்கு நீ எவ்வகையிலும் தகுதியில்லாதவன், என்றான். கர்ணன் விடவில்லை.அடக்கோழையே! முதலில் போருக்கு அறைகூவல் விடுத்தவனே நான் தான். நீ மட்டும் அதற்கு தயார் என்றால் தோற்கப்போகும் உன் தலையை வெட்டி, ரத்தத்தால் இந்த யுத்த களத்தில் வழிபாடு நடத்துவேன், என்றான். இந்நேரத்தில் கிருபாச்சாரியார் குறுக்கிட்டார்.

கர்ணா! நீ சாதாரண தேரோட்டியின் மகன். அரச குலத்தவன் அல்ல! அரசகுலத்தவர் தான் அரச குலத்தவரோடு வீரம் பேச தகுதியுள்ளவர்கள். நீ அர்ஜூனனிடம் பேசியது குற்றம், என்றார். உடனே துரியோதனன் கொதித்தெழுந்தான். ஆச்சாரியரே! தாங்கள் சொல்வதை ஏற்க மாட்டேன். படித்தவர்கள், பேரழகிகள், கொடையாளர்கள், வீரர்கள். மன்னர்கள், ரிஷிக்களுக்கு ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் பேசுவது முறையல்ல. ஏனெனில், நீங்களே ஒரு நாணல் புல்லில் இருந்து பிறந்தவர் தான். நாராயணர் நரசிம்மராக பிறந்தது ஒரு தூணில் இருந்து. சிவபெருமான் மூங்கிலில் இருந்து அவதரித்தார். அகத்தியமாமுனியும், துரோணரும் பிறந்தது கும்பத்தில் இருந்து! எனவே தாங்கள் பேசுவது ஏற்புடையதல்ல. சரி...ஒருவேளை அரசகுலத்தில் பிறந்தவன் தான் அர்ஜூனனனுடன் சண்டையிட வேண்டுமானால், இப்போதே இந்தக் கணமே கர்ணனும் அரசன் தான். இதோ! என் தேசத்துக்கு உட்பட்ட அங்கதேசம் இனி கர்ணனுக்குரியது. அவனே அங்கநாட்டின் மன்னன். அவனுக்கு தன் கிரீடத்தையே எடுத்து சூட்டினான். தன் சிம்மாசனத்தில் அவனை அமர வைத்து, அவன் அருகிலேயே சரிசமமாக அமர்ந்து கொண்டான். இப்படி நட்புக்கு இலக்கணமாக விளங்கிய துரியோதனனை நன்றிப் பெருக்குடன் ஆனந்தக்கண்ணீர் விழிநுனியில் தொக்கி நிற்க பார்த்தான் கர்ணன். அத்துடன் யுத்த அரங்க போட்டி வேளை முடியவே பிரச்னையும் முடிந்து விட்டது. மறுநாள் துரோணர் தன் சீடர்கள் எல்லோரையும் அழைத்தார்.

என் அன்பு மாணவர்களே! நீங்கள் நேற்று போர் அரங்கத்தில் காட்டிய வித்தைகளை நினைத்து பெருமிதமடைகிறேன். இப்போது நீங்கள் எனக்கு குருதட்சணை தர வேண்டும். என்னை பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் அவமானப்படுத்தினான். அவனை நீங்கள் கைது செய்ய வேண்டும். அவன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது. அவனைக் கொல்லாமல் உயிரோடு தேர்க்காலில் இட்டுக்கட்டி இழுத்து வாருங்கள். இதைச் செய்வீர்களா? என்றார். அனைவரும் ஆர்வமுடன் செய்கிறோம் குருவே என்றனர். சற்று கூட தாமதிக்காமல், பாண்டவ, கவுரவ சேனை புழுதிப்படலத்தைக் கிளப்பிக்கொண்டு கிளம்பியது. பாஞ்சாலதேசம் முற்றுகையிடப்பட்டது. துருபதன் இதுகண்டு கலங்கவில்லை. அவனும் மாபெரும் வீரன் தான். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து திடீர் தாக்குதல் நடத்தினாலும் கூட அஞ்சாநெஞ்சம் கொண்ட அந்த மாவீரன், பாண்டவ கவுரவப் படையைச் சந்திக்க, தனது சேனையை குறுகிய காலத்தில் திரட்டிக்கொண்டு எதிர்த்து போரிட வந்தான். இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். மனித வாழ்க்கை என்பதே துன்பம் நிறைந்தது தான். எதிர்பார்த்த துன்பத்தை நாம் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். ஆனால், எதிர்பாராமல் வரும் துன்பங்களை நம்மால் சகிக்க முடிவதில்லை. நிலை குலைந்து போய்விடுவோம். இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவர் திடீரென இறந்து விட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது அந்தக் குடும்பம். அவரது மறைவால், அவர்கள் உலகமே இருண்டு விட்டது போன்ற நிலையை அடைந்து விடுகின்றனர். பின்விளைவுகளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட கொடும் துன்பம் தாக்கும் நேரத்தில் கூட, தோல்வியோ, வெற்றியோ...எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் போராட பழக வேண்டும் என்பதையே துருபதனின் எதிர்போராட்டம் எடுத்துச் சொல்கிறது. துருபதன் தன்னை தாக்க வந்தவர்களுடன் கடுமையாகப் போராடினான். அவனது தாக்குலைத் தாக்கு பிடிக்க முடியாமல் துரியோதனும், அவனது சகோதரர்கள் 99பேரும் திணறினர். துரியோதனனின் படைகள் பின்வாங்கின. ஒரு கட்டத்தில் உயிருக்குப் பயந்து அவர்கள் அஸ்தினாபுரத்துக்கே ஓடி விட்டார்கள். துருபதனின் அம்புமழையை ஒரே ஒருவன் தான் தாக்குப் பிடித்தான். அந்தமாவீரனுடன் ஆனந்தமாக அனுபவித்து போர் செய்தான் துருபதன். ஆனால், எதிர்பாராதவிதமாக அர்ஜூனன் விட்ட அம்பு துருபதன் மீது பாய்ந்தது. அவன் சாய்ந்து விழுந்தான். அவனைக் கைது செய்த அர்ஜூனன், அவனைத் தேர்க்காலில் சேர்த்துக் கட்டினான். தேரை அஸ்தினாபுரத்துக்கு விரட்டினான். துரோணாச்சாரியார் தன் சிஷ்யப்பிள்ளைகள் பாய்ந்தோடி வருவதைப் பார்த்தார். தேர்க்காலில் துருபதன் அவமானம் குன்ற கிடந்தான். தேர்ச்சக்கரங்கள் சுற்றியதில் அவன் களைத்துப் போயிருந்தான். துரோணர் அவனை நோக்கி ஏளனமாகச் சிரித்தார். ஏ துருபதா! நம்பிக்கை துரோகியே! நான் நினைத்தால் இப்போதே உன்னை கொன்று ஒழிக்க முடியும். என் பிள்ளைக்கு பசிக்கிறது என உன்னிடம் வந்து நின்ற போது, ஒரு அந்தணன் என்றும் பாராமல் என்னை விரட்டியடித்தாயே! இப்போது உன் நிலையைப் பார்த்தாயா? உனக்கு நான் சமஎதிரியல்ல! என் சிஷ்யர்களிடமே நீ சிக்கிக் கொண்டது அவமானமாக இருக்கிறதல்லவா! உன்னை வென்றதன் மூலம் பாஞ்சால தேசம் இன்றுமுதல் எனக்குச் சொந்தம். இருந்தாலும், நீ சொன்னபடி பாதி ராஜ்யத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். உனக்கு உயிர்பிச்சையும் தருகிறேன். இவனை விடுதலை செய்துவிடுங்கள். உயிர்ப்பிச்சை கொடுக்கிறேன், என்றார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top