புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழகத்தின், கோவை பெரியகடை பவிழம் வீதியைச் சேர்ந்த கண்ணுப்பையன் - காமாட்சியின் ஒரே மகள் மகாலட்சுமி (20).


கண்ணுப்பையன் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். காமாட்சி தனது ஒரே மகளான மகாலட்சுமியை சிரமத்தின் மத்தியில் படிக்க வைத்தார்.

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மகாலட்சுமி பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களாக மகாலட்சுமி கல்லூரிக்கு செல்லவில்லை. நேற்று கல்லூரிக்கு சென்றார். அப்போது அவரை பேராசிரியையும், கல்லூரி முதல்வரும் அழைத்து கண்டித்தனர்.

மேலும் `உனது பெற்றோரை அழைத்து வா´ என்று உத்தரவிட்டனர். அதன்படி மகாலட்சுமி செல்போனில் தனது தாயாருடன் தொடர்பு கொண்டு உடனே கல்லூரிக்கு வருமாறு அழைத்தார்.

காமாட்சி சிறிது நேரத்தில் கல்லூரிக்கு சென்று முதல்வரையும், பேராசிரியையும் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் மற்ற மாணவிகள் முன்பு மகாலட்சுமியை திட்டியதாகவும், `வருகைப்பதிவேடை கிழித்தது நான்தான்´ என்றும் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

செய்யாத தவறுக்காக இப்படி நம்மிடம் எழுதி வாங்கிக் கொண்டார்களே என்று மகாலட்சுமி தனது தாயிடமும் மற்ற மாணவிகளிடமும் வேதனைப்பட்டார்.

கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பிய அவர் அங்கிருந்த சாணிப்பவுடரை கரைத்து குடித்து விட்டார். வெளியே சென்றிருந்த காமாட்சி வீட்டுக்கு திரும்பிய போது தனது மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனடியாக மகாலட்சுமியை அவரும் அக்கம் பக்கத்தினரும் கோவை அரச வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரிய கடை வீதி பொலிசில் காமாட்சி புகார் செய்தார். அதன் பேரில் கல்லூரி முதல்வர், மற்றும் பேராசிரியை மீது 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 384 (எழுதி வாங்குதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி மகாலட்சுமி படிப்பில் கெட்டிக்காரி எனவும் தெரியவருகின்றது.

மற்ற மாணவிகள் முன்பு திட்டியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்று மற்ற மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தற்கொலை செய்த மாணவி மகாலட்சுமி உடல் கோவை அரச வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏற்படால் தடுக்க பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி மகாலட்சுமியின் தாய் காமாட்சி கண்ணீர் மல்க கூறியதாவது....

நான் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்றிருந்தேன். அதன்காரணமாக என் மகள் சில நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்.

விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றாள். அவள் கல்லூரிக்கு சென்ற சிறிது நேரத்தில் கல்லூரியிலிருந்து என்னை வரச்சொல்லி போன் வந்தது.

நானும் அங்கு சென்றேன். கல்லூரி நிர்வாகத்தினர் என்னிடம் உங்கள் மகள் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார். இதனால் கல்லூரி வருகை பதிவேட்டை திருடி அதை கிழித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறினர்.

அதற்கு நான், என் மகள் அப்படி எதுவும் செய்ய மாட்டாள். அவள் நல்ல பெண் என்று கூறினேன்.

அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதோடு அங்கிருந்த அனைவரின் காலில் விழுந்து கெஞ்சினேன். பின்னர் கல்லூரியிலிருந்து வீடு திரும்பினேன்.

நான் வெளியே வந்தவுடன் என் மகளை கல்லூரி பேராசிரியைகள் நீ செய்த தவறுக்கு உன் தாய் அனைவரது காலிலும் விழுந்து கெஞ்சுகிறாரே, நீ எல்லாம் ஒரு பெண்ணா, உனக்கு மானமே இல்லையா? என்று அனைத்து மாணவிகள் முன்னிலையிலும் கேவலமாக திட்டியுள்ளனர்.

கல்லூரி முடிந்து என் மகள் பஸ்சில் வீடு திரும்பும்போது என் தாய்க்கு அவமானம் ஏற்பட நானே காரணமாகி விட்டேனே என்று அழுது கொண்டே வந்திருக்கிறாள்.

மகாலட்சுமி வீட்டுக்கு வந்ததும் நான் கடைக்கு சென்றேன். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து கரைத்து குடித்திருக்கிறாள்.

வீடு திரும்பிய நான் குற்றுயிராய் கிடந்த அவளை வைத்தியசாலைக்கு தூக்கி சென்றேன். செல்லும் வழியிலேயே இறந்து விட்டாள்.

என் கணவர் என்னையும், என் மகளையும் அனாதையாக விட்டு விட்டு 18 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நான் கஷ்டப்பட்டு என் மகளை பெரிய ஆளாக்க வேண்டும் என்று படிக்க வைத்தேன்.

ஆனால் அவளும் இன்று என்னை அனாதையாக விட்டு சென்று விட்டாள். என் மகளின் சாவுக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை என் மகளின் உடலை வாங்க மாட்டோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top