புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அந்த தோப்பில் மா, தென்னை, வேம்பு, பலா, தேக்கு, வாகை, பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும், தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.வேலி அடைக்கப் படவில்லை. நான்கு புறங்களும் திறந்தே கிடந்தன. யார் யாரோ வளர்க்கும் ஆடுமாடுகள்
வரும்; புல்லை மேயும்; சென்றுவிடும். அங்கே, கிளி, சிட்டு, காகம் போன்ற பறவைகளும் குரங்கு, மான் போன்ற விலங்குகளும் ஓணான், உடும்பு, அணில் போன்ற சிற்றுயிர்களும் ஏராளமாக வாழ்ந்து வந்தன.

படர்ந்து கிளை பரப்பி நின்ற மாமரத்தின் அருகில் நின்றிருந்த தென்னை மரத்திற்கு, அன்றைக்கு என்ன வந்ததோ தெரியவில்லை. சற்று வாய்கொழுப்புடன் பேசிக் கொண்டிருந்தது.

""இதோ பார்...உன்னை விட நானே உயர்ந்தவன்!'' என்று தலையை உலுக்கிக் சொன்னது.

"யாராவது எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே நமக்கென்ன போச்சு...' என்று மாமரம் வாயை மூடிக்கொண்டு சும்மா கிடக்கவில்லை. வலுச்சண்டைக்குப் போகக் கூடாது. வந்த சண்டையை விடக்கூடாது; என்பது அதன் கொள்கை.

""நான்தான் உன்னைவிட உயர்ந்தவன்,'' என்றது மாமரம்.

""என்னுடைய உயரம் என்ன? உன்னுடைய உயரம் என்ன? பார்த்தாலே தெரியுமே! உனக்குக் கண் இல்லை. அதனால் தெரியவில்லை!'' என்று மீண்டும் தென்னை மரம் குரல் உயர்த்தியது.

""நோஞ்சானைப் போல் ஒல்லியாக உயர்ந்து நின்றால் மட்டும் போதுமா? என்னைப் போல் நூற்றுக்கணக்கில் கிளை பரப்பி இலை தழைகளோடு காய்கனிகளைத் தாங்கி நிற்க வேண்டாமா?'' என்று தென்னையின் மூக்கறுப்பது போல் கூறியது மாமரம் .

""நானும்தான் இளநீர்க் குலைகளைக் சுமந்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் தேங்காய்களைக் கொடுப்பவன் நான். நீ ஆண்டில் சில மாதங்களே மாங்காய்களைக் கொடுக்கிறாய். உன்னைவிட நானே உயர்ந்தவன்!'' என்றது தென்னை.

""நான் வெயிலில் களைத்து வருவோர்க்கு நிழல் கொடுப்பேன். உன்னால் முடியாது. அது மட்டுமா? முக்கனிகளுள் ஒன்றாக என்னைத்தான் வைத்துள்ளனர்!'' என்று மாமரம் விடாமல் பதிலுக்குப் பதில் பேசியது.

""உன்னால் நிழல்தான் கொடுக்க முடியும். குடியிருக்கும் வீடுகளுக்குக் கூரையாக அமைந்து வெயில், மழை, காற்றிலிருந்து மக்களைக் காப்பேன். அது மட்டுமோ? இறைவனை வழிபட என் தேங்காய்களைத்தான் பயன்படுத்து கின்றனர். முக்கனி என உன்னைச் சொல்வதற்காகப் பீற்றிக் கொள்ளாதே!'' எனத் தென்னை சொல்லிவிட்டு வானத்தை, அண்ணாந்து பார்த்தது.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவன், தென்னை மரத்தில் விடுவிடுவென வேகமாக ஏறினான். அதன் கழுத்துப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்க் குலைகள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்துவிட்டுக் கீழே இறக்கினான். சிதறிக் கிடந்த தேங்காய்களையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டுக் கட்டினான்.

அதைக் கண்ட மாமரத்திற்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. இனிமேலாவது தென்னை மரத்தின் கொழுப்பு அடங்கும் என, எண்ணி எகத்தாளமாய்த் தென்னையை அண்ணாந்து பார்த்தது.
தென்னைக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தது; கீழே பார்க்கவில்லை.

சற்று நேரம் மாமரத்தின் நிழலில் இளைப்பாறிய அந்த மனிதன் களைப்பு நீங்கி எழுந்தான். எழுந்த வேகத்தில் மாமரத்தில் ஏறினான். ஒரு கிளை விடாமல் அத்தனை கிளைகளுக்கும் தாவி, அங்கே கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த மாங்காய்களைப் பறித்துப் போட்டுவிட்டுக் கீழே இறங்கினான்.

எல்லா மாங்காய்களையும் பொறுக்கினான். இரண்டு கோணிப்பை தேறியது.

அதுவரை வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னை மரம், இப்போது மாமரத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டது.

நமக்கு வந்த துன்பம், பக்கத்து வீட்டுக்காரனுக்கும் வந்தால் ஒருவித ஆறுதல் கிடைக்குமே! அந்த ஆறுதல் தென்னைக்குக் கிடைத்தது; மாமரமோ சோகத்தில் மூழ்கிக் கிடந்தது.

அந்த மனிதன் இரண்டு மூட்டை மாங்காய்களையும், ஒரு மூட்டை தேங்காய்களையும் ஒரு கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அவன் புறப்பட்டுச் சென்றதைத் தென்னை மரமும், மாமரமும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றன.

அப்போது கலகலவென சிரிப்பொலி கேட்டது. சிரிப்போலி வந்த திசையில் தென்னை மரமும், மாமரமும் பார்வையைச் செலுத்தின. எதிரே இருந்த பலா மரத்தில் கிடந்த பலாப்பழத்தைத் தின்று கொண்டிருந்த குரங்கு சிரித்தது என்பதை உணர்ந்து கொள்ள அவ்விரண்டிற்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை.

""குரங்கே...! ஏன் அப்படி எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாய்?'' என மாமரம் அழுகையுடன் கேட்டது.

""சற்று முன் நீங்கள் இருந்த நிலையையும் இப்போது நீங்கள் இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தேன்; சிரிப்பு வந்தது. அதனால் சிரித்துவிட்டேன்!'' என்று குரங்கு சொன்னது.

""நாங்கள் எப்படி இருந்தோம். பெரிசா கண்டு பிடிச்சிட்டே?''என்று தென்னை கேலியாகப் பேசிற்று.

""ஒரே இடத்தில் இருக்கும் நீங்கள் ஒற்றுமையாக இருக்காமல் நீ பெரியவனா? நான் பெரியவனா? என வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருந்தீர்களே, இப்போது தெரிகிறதா யார் பெரியவன் என்று? உங்கள் இருவரையும் மொட்டை அடித்துத் தேங்காய்களையும், மாய்காய்களையும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு போகின்றானே ஒரு குள்ள மனிதன், அவன்தான் உங்கள் இருவரைக் காட்டிலும் உயர்ந்தவன். உலகத்தில் யாருமே பெரியவர்களும் இல்லை; யாருமே சிறியவர்களும் இல்லை. அவரவர் உண்டான பணியினை அவரவர் செய்தாலே போதும்! நீ பெரியவனா நான் பெரியவனா என போட்டி போடாமல் வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற உண்மையை எண்ணிப் பார்க்கவேண்டும்,'' எனச் சொன்னது குரங்கு.

""நீ தூக்கணாங்குருவியின் கூட்டைப் பிய்த்தெறிந்த கதை எங்களுக்கு தெரியாதா... நீ என்ன பெரிய ஒழுங்கா?''
""தூக்கணாங் குருவியின் வாழ்க்கை முறை வேறு; என்னுடைய வாழ்க்கை முறை வேறு,'' என்றது குரங்கு.
""பின் ஏன் பிரித்தெறிந்தாய்?'' கேட்டது மாமரம்.

""தூக்கணாங் குருவிக்குத் திமிர் அதிகம். ஆணவம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கூட்டைக் கட்டி குடியிருந்ததால் உலகத்தில் தானே புத்திசாலி என்றும், மற்றவர்கள் எல்லாம் உருப்படாதவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தது. கூடியவரை அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே நல்லது. எனக்குப் புத்தி சொல்லுகின்ற அளவிற்குத் தூக்கணாங் குருவிக்குக் கொழுப்பு தலைக்கேறியிருந்தது. அந்தக் கொழுப்பை அடக்கத்தான் அப்படிச்செய்தேன்!'' என்றது குரங்கு.

""நீ என்ன சொல்கிறாய்?'' என்று தொடர்ந்து மாமரம்.

""கூடு கட்டத் தெரிந்த குருவிக்குக் காக்கத் தெரியவில்லை! கட்டுவதில் அதற்குப் பலம் என்றால் எனக்கு இன்னொரு வகையில் பலம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கத்தான் அவ்வாறு செய்தேன்!'' என்று சொல்லிக்கொண்டே வேறொரு மரத்திற்குத் தாவிச் சென்றது குரங்கு.

குரங்கின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஆச்சரியமடைந்தது தென்னையும், மாமரமும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top