புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை நெய்வதில் வல்லவன். ஆனால், அவன் திறமைக் கேற்ற வேலை அவனுக்குக்கிடைக்கவில்லை. சரிவர வேலை கிடைக்காததால்,வீட்டில் வறுமை சூழ்ந்தது.

தவசியை விட திறமையில் குறைந்த நெசவாளிகள் நாள் பூராவும் வேலை செய்து நிறைய பொருள் ஈட்டி வந்தனர். அவர்கள் நெய்யும் மோட்டாரகத் துணிகளுக்கு நிறைய கிராக்கி இருந்தது. அதனால் அவர்களுக்குத் தொழில் நல்ல முறையில் நடந்தது. ஆனால், உயர் ரகத்துணிகள் நெய்யும் தவசிக்கு வேலை கிடைக்கவில்லை.

கடைசியில் தவசி மனம் வெறுத்தவனாய்,"இவ்வூரில் உள்ள மக்கள் என் திறமையைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய திறமையை மதித்து வேலை தரும் வேற்றூருக்குச் சென்று பிழைக்கலாம்' என்ற நோக்கத்துடன் அவ்வூரை அடுத்துள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு அவனுடைய திறமைக்கேற்ற வேலை கிடைத்தது. நிறைய வேலை செய்தான். அதனால் அவனுக்கு நிறையப் பொருள் கிடைத்தது. செலவு போக எஞ்சியதைக் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தான்.

சில காலம் சென்றன. அதுவரை நூறு பொற்காசுகள் சேர்ந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று மனைவி மக்களைக் காண நினைத்தான். அன்றைய தினம் இரவு அவன் பணத்தைப் புதைத்து வைத்த இடத்தருகில் இருந்த இரண்டு தேவதைகள் பேசிக் கொண்டன.

""நண்பனே, தவசிக்கு இது போதாத காலமாயிற்றே. அவனுக்கு ஏன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தாய்?'' என்று மற்ற தேவதையைப் பார்த்துக் கேட்டது.

""நான் என்ன செய்வேன்? உழைப்புக்குத் தக்க ஊதியம் தரவேண்டியது என் பொறுப்பு. கொடுத்து விட்டேன். உனக்கு அது பிடிக்கவிட்டால், திரும்ப எடுத்துக்கொள்'' என்றது.

மறுநாள் காலையில் தவசி புதைத்து வைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது ஒரு பொற்காசு கூட இல்லை. காலியாக இருந்தது. அதைக் கண்டதும் அவன், "குய்யோ முறையோ' என்று அழுதான். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து காரணம் கேட்டனர்.

தவசி அழுதுகொண்டே பொற்காசுகள் களவு போனதைக் கூறினான்.

""பைத்தியக்காரா! பொற்காசுகளை இவ்விதம் பூமியில் புதைத்து வைக்கலாமா? யாரோ நீ புதைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இனி இம்மாதிரி முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே! பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உன்னால் முடியாவிட்டால், நமது ஊர் பெரிய தனக்காரிடம் கொடுத்து வை. அவர் ரொம்பவும் நம்பிக்கையானவர். உனக்கு தேவையான பொழுது கொடுப்பார்,'' என்று ஒருவர் புத்திமதி கூறினார்.

தனது பைத்தியக்காரத் தனத்தை எண்ணி வருந்தியவனாக மேலும், கடினமாக உழைத்து நிறைய பொருள் சேர்த்தான். இம்முறை சேர்த்த பணத்தை அவ்வூரில் பெரியதனக்காரிடம் கொடுத்து வைத்திருந்தான்.
சில மாதங்கள் சென்றன.

இருநூறு பொற்காசுகளுக்குமேல் தவசி சேர்த்துவிட்டான். நீண்ட நாட்களாகப் பிரிந்து இருக்கும் தனது குடும்பத்தினரை நினைத்துக் கொண்டான். சேர்ந்த பொருளுடன் சென்று அவர்களை துயரைப் போக்க வேண்டும்மென்று தீர்மானித்தான். பெரியதனக்காரிடம் சென்றான். தான் சேமித்த பொற்காசுகளில் இருநூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினான்.

பொற்காசுகளை ஒரு முடிப்பில் கட்டிக் கொண்டு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான் தவசி. வழியில் களைப்பாக இருந்தது. ஒரு மரத்தடியில் படுத்துக்கொண்டான். அந்த மரத்தின் மேல் முன்பு தவசி பொருளை அபகரித்துக் கொண்ட தேவதைகள் இருந்தன. அவை பேசலாயின.

"" என்ன தோழி தவசிக்கு இன்னும் நல்ல காலம் வரவில்லை. அதற்குள் அவசரப்பட்டு அவனுக்கு இருநூறு பொற்காசுகளுக்கு மேல் கொடுத்துவிட்டாயே,'' என்று கேட்டது ஒரு தேவதை.

""நான் என்ன செய்வேன்? அவனுடைய உழைப்புதான் அவனுக்குப் பொருளைச் சேர்த்துத் தந்தது. அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்றது.

""எப்படியிருந்தாலும் சரி. தவசி, இந்த பொருளுடன் வீட்டுக்குச் செல்லக்கூடாது,'' என்று கூறிய தேவதை தவசியின் மடியிலிருந்து தங்கக் காசுகளை மாயமாய் அபகரித்து விட்டது.

தூங்கி எழுந்த தவசி மடியைத் தடவிப் பார்த்தான். பை காணவில்ல. லேசாக இருந்தது. அவசர அவசரமாகத் திறந்து பார்த்தான். அதில் ஒன்றும் இல்லை. காலியாய் இருந்த பையைக் கண்டதும் தவசிக்கு துக்கம் தாங்கவில்லை. "வெறும் கையுடன் எப்படி வீடு செல்வது?' என்று வருந்தியவனாக மரத்திலேயே தூக்கிலிட்டு இறந்துவிட முடிவு செய்தான். தான் உடுத்தியிருந்த துணியை எடுத்து மரக்கிளையில் கட்டினான். கழுத்தில் சுருக்கை இறுக்கிக்கொள்ளும் போது தேவதைகள் அவன் முன் தோன்றின.

""தவசி, உன்னுடைய பொருள்களை அபகரித்துக் கொண்டது நாங்கள்தான். உனக்கு வேண்டியதைக்கேள்,'' என்று தேவதைகள் கூறின.

""எனக்கு நிறையப் பொருள் கொடுங்கள். அதுவே போதும்!'' என்றான் தவசி

""தவசி, உணவுக்கும் உடைக்கும் தவிர மீதியுள்ள பொருளால் உனக்கு என்ன நன்மை? உன்னால் அனுபவிக்க முடியாததும், தானம் செய்ய முடியாததுமான பொருளால் உனக்கு என்ன நன்மை?'' என்றது ஒரு தேவதை.

""தேவதையே, நான் என் ஆயுள் காலத்தில் பெரும்பகுதியைப் பொருள் தேடுவதிலேயே செலவிட்டு விட்டேன். இதுவரை நான் அடைந்தது துன்பமும் துயரமும்தான்! இனியாவது நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால் எனக்கு நிறையப் பொருள் தேவைப்படுகிறது,'' என்றான் தவசி.

""உனக்கு வேண்டிய பணத்தை தருகிறோம். அதில் தான தருமம் செய்து, ஏழைகளுக்கு உதவி செய்தால் உன் செல்வம் நிலைக்கும்... இல்லையென்றால் உன் செல்வம் அழிந்துவிடும்,'' என்றது.

அப்படியே செய்வதாக வாக்களித்தான் தவசி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top