இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், அதனால் நாட்டு விட்டு நாடு தாவிய தமிழ் மக்கள் எனப் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் தமிழர்கள்.உள்நாட்டில் இடம்பெறும் யுத்தத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து சென்றாலும் அந் நாட்டினால் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு யுத்த முனையாக இருக்கும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படும் பரிதாபங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் வசித்து வந்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளை என்பவரது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டு, அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது 26.12.2011 அன்று தற்கொலை செய்துள்ளார்.
இவர் யாழ் - பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டதுடன் குறிப்பிட்ட காலமாக இந்தியாவில் அகதியாக வசித்து வந்தவர் என்பதோடு அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து அரசுக்கு நீண்ட காலமாக சிறீலங்காவினால் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்றமை, சித்திரவதைகள் போன்ற அனைத்துவிடயங்களும் எம் மக்களால் பேரணிகள், அரசியற் சந்திப்புகள், மகஜர்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் அகதித் தஞ்சத்தினை நிராகரித்துள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
உலகம் எங்கும் மனிதம் மரத்து விட்டது என்பதற்கு மேற்படி சம்பவம் ஆதாரமாகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக