புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வியாசர் அவளைத் தேற்றினார். காந்தாரி! கவலை கொள்ளாதே! நீ சாதாரணமானவளா? கணவனுக்கு கண்
இல்லை என்பதற்காக உன் கண்ணைக் கட்டிக் கொண்ட கற்புக்கரசியல்லவா? அந்த கற்பின் வலிமை இந்த கர்ப்பத்தைக் காப்பாற்றும், என்றவர், கீழே விழுந்த கருவை துண்டு துண்டாக வெட்டினார். நூறு துண்டுகள் இருந்தன. வெட்டியது போக ஒரு துண்டு மீதி வந்தது. காந்தாரி, நெய் நிரம்பிய நூறு கும்பங்களை எடுத்து வா, என்றார். காந்தாரி அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவே, தோழிப்பெண்கள் கும்பங்களை எடுத்து வந்தனர். அவற்றில் துண்டுகள் ஒவ்வொன்றையும் போட்டார் வியாசர். தனியாக இருந்த துண்டை ஒரு பானையில் போட்டு விட்டார். காந்தாரி! இவற்றை நீ பத்திரமாக பாதுகாத்து வா. இவை ஒவ்வொன்றும் வளர்ந்து ஒவ்வொரு குமாரனை உனக்கு தரும். ஆஸ்திக்கு எத்தனை ஆண்கள் பிறந்தாலும், ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா? அந்தப் பானையில் உள்ள கரு பெண்ணாய் பிறக்கும், என சொல்லி விட்டு மறைந்து விட்டார். கருக்கள் வளர்ந்தன. முதல் கும்பத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அவன் தான் துரியோதனன். அவன் பிறந்த போது மங்கலமுரசு முழங்கிக் கொண்டிருந்தது. 

அதே நேரம் எங்கிருந்தோ பல நரிகள் ஒன்றுசேர்ந்து ஊளையிட, மங்கலச்சத்தம் அடங்கி விட்டது. கெட்ட நேரத்திற்கு அது அறிகுறியாக இருந்தது. துரியோதனன் பிறந்த விபரமும், அவனைத் தொடர்ந்து காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறக்க இருக்கும் விபரமும் பாண்டுவை எட்டியது. ஆஹா...என் அண்ணியாருக்கு நூறு குழந்தைகள் பிறக்கப் போகிறதாம்! எனக்கு ஒரு குழந்தை தான் இருக்கிறது. குந்தி! மீண்டும் தேவர்களை நினை. அந்த நூறு பேருக்கும் சமமான வலிமையுள்ள குமாரனைப் பெறு, என்றான் பாண்டு. கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த குந்தி, வாயு பகவானுக்குரிய மந்திரத்தைச் சொன்னாள். வாயு வந்தான். இருவரும் கூடிக் கலந்தனர். கர்ப்பமானாள் குந்தி. ஒருநாள் நடுப்பகலில் நல்ல முகூர்த்த வேளையில் ஒரு குழந்தை பிறந்தது. அவன் பிறந்த வேளை நல்வேளையாக அமைந்ததால் யாக குண்டங்களில் அக்னி வலப்பக்கமாக எரிந்தது. (கும்பாபிஷேகம் நடக்கும் போது யாக குண்டங்களில் அக்னி வலப்புறமாக எரிந்தால் அந்த ஊருக்கே நல்லது). அந்தக் குழந்தை தான் பீமன். பாண்டுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இங்கே இப்படியிருக்க, காந்தாரியின் அரண்மனையில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிந்தது. அங்கே கிரகங்கள் மோசமாக இருந்த நிலையில், கொடுமையின் ஒட்டுமொத்த வடிவான துச்சாதனன் பிறந்தான். இவனைத் தொடர்ந்து, வரிசையாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை வீதம் பிறக்க குழந்தைகளின் அழுகுரலால் அந்த அரண்மனை சிரித்தது. ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். ஆனால், மேகக்கூட்டங்கள் இந்த பூமிக்கு வந்துள்ள அபசகுனத்தை அறிவிக்க ரத்தமழை பொழிந்தன.

பிறந்த குழந்தைகளுக்கு திருதராஷ்டிரன் பெயர் சூட்டினான். துரியோதனன், துச்சாதனன், யுயத்சு, துச்சகன், துச்சலன், துர்முகன், விளிஞ்சதி, விகர்ணன், சலசந்தன், சுலோசனன், விந்தன், அதுவிந்தன், துர்த்தருஷன், சுவாகு, துர்ப்பிரதருஷணன், துர்மருஷ்ணன், துருமுகன், துர்க்கருணன், கர்ணன் (துரியோதனாதிகளில் ஒருவனுக்கும் இப்பெயர் உண்டு), சித்திரன், உபசித்திரன், சித்திராக்கன், சாரு, சித்ராங்கதன், துர்மதன், துர்பிரகாஷன், விவித்சு, விகடன், சமன், ஊர்ணநாபன், பத்மநாபன், நந்தன், உபநந்தன், சேனாதிபதி, சுடேணன், கண்டோதரன், மகோதரன், சித்ரவாகு, சித்ரவர்மா, சுவர்மா, துருவிரோசனன், அயோவாகு, மஹாவாகு, சித்திரசாயன், சுகுண்டலன், வீமவேகன், வீமபாலன், பாலகன், வீமவிக்ரமன், உக்ராயுதன்... இப்படி 50 பேருக்கு பெயர் சூட்டப்பட்டது. அடுத்து பிறந்த 50 குழந்தைகளுக்கு வீமசரன், கனகாயு, திருஷாயுதன், திருஷவர்மா, திருஷகத்ரன், சோமகீர்த்தி, அநூதரன், சராசந்தன், திருஷசந்தன், சத்தியகந்தன், சுகச்சிரவாகு, உக்ரச்சிரவா, உக்ரசேனன், சேனானி, மகமூர்த்தி, அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன், துராதரன், திருஷகத்தன், சுகத்தன், வாதவேகன், சுவர்ச்சசன், ஆதித்யகேது, வெகுவாதி, நாகத்தன், அநுயாயி, நிஷல்கி, கவசி, தண்டி, தண்டதரன், தனுக்கிரகன், உக்கிரன், பீமரதன், வீரன், வீரவாகு, அலோலுபன், அபயன், ரவுத்ரகம்மன், திருஷரதன், அநாதிருஷ்யன், குண்டபேதன், விராவி, தீர்க்கலோசனன், தீர்க்கவாகு, மகாவாகு, வியுகுடாகு, கனகரங்கதன், குண்டசித்து, சித்திரகன் என்று பெயர் வைக்கப்பட்டது. பானையில் இருந்த பிறந்த பெண் குழந்தைக்கு துச்சளை என்று பெயர் சூட்டினர். உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதியாக அவள் வளர்ந்தாள். பாண்டுவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. குந்தி! என் அண்ணி மிக மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாளாம். நூறு பிள்ளை பெற்று விட்டதால் கர்வம். எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும். உனக்கு பிடித்த இன்னொரு தேவனை கூப்பிடு, என்றான். பொறாமை மனிதனை அழிக்கிறது. பாண்டு நல்லவன் என்றாலும், பிறர் வீட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் அவனால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொறாமைத் தீ அவனது குழந்தைகளை என்ன பாடு படுத்தப்போகிறது என்பதையும் அவன் உணரவில்லை. குந்தியோ, கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டும், அக்கால தர்மப்படியும் தேவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தாள். இப்போது அவள் தேவர் தலைவன் இந்திரனை அழைத்தாள். இந்திரன் வந்தான். குந்தியோடு கூடினான். கர்ப்பவதியான குந்தி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் குழந்தையைப் பெற்றெடுத்தான். வெற்றிக்கென்றே பிறந்தான் விஜயன் என்னும் அர்ஜூனன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top