உணவு முழுவதையும் தின்று தீர்த்தான் பீமன். பகாசுரனுக்கு ஆத்திரம் அதிகமானது. அடேய் துஷ்டா! இந்த உணவை உட்கொண்ட உன்னை அப்படியே விழுங்கி விடுகிறேன் பார், என்று அருகே நெருங்கினான். இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. அசுரன் என்பதால் சற்றே உக்கிரமாகப் போரிட்டான் பகாசுரன். ஆனால், அவனது தலையைப் பிய்த்து எறிந்தான் பீமன். அவனது உடலை எரித்தபிறகு மீண்டும் வேத்தீரகியத்திற்கு திரும்பினான். அவ்வூர் அந்தணர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பீமனை அவர்கள் திருமாலாகவே பார்த்தனர். ஊரெங்கும் விளக்கேற்றி விழா கொண்டாடினர். இங்கே இவர்கள் இப்படியிருக்க, துரோணரால் அவமானப்படுத்தப்பட்டு தோற்றோடிய துருபதன் ஒரு மகளைப் பெற்றான். அவள் அக்னியில் இருந்து தோன்றியவள். அவளுக்கு திரவுபதி என பெயர் சூட்டினான். அர்ஜூனனின் வில்வித்தையை அவன் ஏற்கனவே அறிந்தவன் அல்லவா? அந்த வீரனுக்கே தன் மகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். ஆனால், பாண்டவர்கள் தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று அவனும் நம்பியிருந்தான்.
திரவுபதி பிறந்ததும் அசரீரி தோன்றி, இவள் பஞ்சபாண்டவருக்கு உரியவள் என்று சொல்லியிருந்தது. அதையும் நினைத்து பார்த்தான் துருபதன். இறைவனின் அனுக்கிரஹம் இப்படியிருக்கும் போது, பாண்டவர்கள் எப்படி இறந்திருக்க முடியும்? அவர்கள் தப்பியிருக்கவும் செய்யலாம்! என்ற சந்தேகமும் அவனுள் இருந்தது. திரவுபதிக்கும் இதேநிலை. தன்னை பஞ்ச பாண்டவர்களுக்கு உரியவள் என அப்பா இளமை முதலே சொல்லி வளர்த்திருக்கிறார். அவர்களில் அர்ஜூனன் மிகமிக திறமைசாலி. அழகன்... அவனைத் தான் திருமணம் செய்ய வேண்டும், என்று நினைத்திருந்தாள். அவன் மீது அவளுக்கு தீராத காதல். இதுவரை அவள் அர்ஜூனனைப் பார்த்ததே இல்லை. ஆனால், மனதார அவனைக் காதலித்தாள். இந்த நிலையில் பாண்டவர்களைப் பற்றிய தகவல் தெரியாததால், துருபதன் தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான். சுயம் வரம் நடத்த ஏற்பாடு செய்தான். மகளே தனக்கு பிடித்த மாப்பிள்ளையை தேர்வு செய்யட்டும் என்பது அவனது எண்ணம். திரவுபதியோ பதறினாள். ஜோதிடர்கள் முன்பு சொன்னதை நினைத்துப் பார்த்தாள். எப்படியும் அர்ஜூனன் வந்துவிடுவான் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இந்த விஷயம் ஒரு அந்தணர் மூலமாக பாண்டவர்களுக்கு போய் சேர்ந்தது.
அவர்கள் பாஞ்சால தேசத்திற்கு புறப்பட்டனர். வழியில் வியாசமுனிவர் எதிர்ப்பட்டார். மக்களே! நீங்கள் புறப்பட்ட நேரம் நல்லநேரம். அதனால் தான் நானே உங்கள் எதிரே வந்திருக்கிறேன். நல்ல நிகழ்வுகளை நிச்சயிக்க செல்லும்போது, மகான்கள் எதிர்ப்பட்டால்,. அது நிச்சயம் நடக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. எக்காரணம் கொண்டும் நீங்கள் எங்கும் தங்கக்கூடாது. இரவிலும் கூட நடக்க வேண்டும். அப்படி சென்றால், சுயம்வர நேரத்துக்குள் பாஞ்சாலத்தை அடைந்து விடுவீர்கள். வழியில் உங்களுக்கு தேவையான உதவிகள் தானே தேடிவரும், என ஆசிர்வதித்து மறைந்தார். வியாசரின் ஆசிர்வாதம் பாண்டவர்களுக்கு உத்வேகத்தைத் தந்தது. அவர்கள் வேகமாக நடந்தனர். கங்கைக்கரையை அவர்கள் அடைந்ததும் வருணன் மனம் மகிழ்ந்து குளிர்ந்த காற்றை வீசினான். அவர்கள் வந்த களைப்பே தெரியவில்லை. தன் நண்பனான அக்னியின் மகளைத் திருமணம் செய்ய வந்தவர்கள் என்பதால் மனம் மகிழ்ந்து அவன் தென்றலாய் வீசினானானாம். தொடர்ந்து அவர்கள் நடந்தனர். வழியில் சித்ரரதன் என்ற கந்தர்வன் அவர்களை மறித்தான். அவர்களை வலுச்சண்டைக்கு இழுத்தான். அவனை அர்ஜூனன் தோற்கடித்தான்.
ஒரு மனித ஜென்மம், கந்தர்வனான தன்னை ஜெயித்ததைப் பாராட்டி, பாஞ்சால தேசத்துக்கு செல்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டி உதவினான் சித்ரரதன். பாஞ்சாலத்துக்குள் நுழைந்ததும். அந்தணர்கள் போல் வேடமணிந்தனர் பாண்டவர்கள். ஏனெனில், ஊரே தங்களை இறந்து விட்டதாக நினைத்திருக்க, அந்த நினைப்பே எல்லாரிடமும் இருக்கட்டும். அப்படியானால் தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என திட்டமிட்டனர். பாஞ்சால தேசத்து மதிலைக் கடந்து நகரத்துக்குள் அவர்கள் புகுந்தனர். தங்கள் இளவரசிக்கு சுயம்வரம் என்பதால் மக்கள் மங்கல வாத்தியங்களை இசைத்து கொண்டிருந்தனர். பலநாட்டுஅரசர்களையும் வரவேற்கும் வகையில் சங்குகள் முழங்கின. பாண்டவர்களுடன் குந்தியும் வந்திருந்தாள். அவள் தங்களுடன் அரண்மனைக்கு வந்தால் யாராவது அடையாளம் கண்டுகொள்ளக்கூடும் என்பதால் அவளை ஒரு மண்பாண்டத் தொழிலாளியின் வீட்டில் தங்க வைத்தனர். நாடாண்ட அந்த மகாராணி, இன்று ஒரு ஓட்டை குடிசையிலே இருந்தாள். பிள்ளைகளுக்காக நம் நாட்டு தாய்மார்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ... இன்றும் அவர்கள் அதைச் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். குந்திதேவியை அந்த குடிசையில் விட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றனர் பாண்டவர்கள். அங்கே பல சிம்மாசனங்கள் போடப்பட்டிருந்தன. பாண்டவர்களின் கண்கள் அவற்றை மேய்ந்தன. அப்போது திருஷ்டத்தும்னன் யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
அரசர்களே! இங்கே நீங்கள் சுயம்வரத்துக்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் அழகிலும் பராக்கிரமத்திலும் விஞ்சியவர்கள். ஆனால், என் தங்கை உங்களில் மிகுந்த பராக்கிரமசாலியோ அவர்களுக்கே மாலையிடுவாள். முதலில் உங்களை என் தங்கைக்கு அறிமுகம் செய்து வைப்போம். அதன்பின் இதோ! உச்சியிலே சுற்றுகிறதே ஒரு சக்கரம். அதன் நடுவிலுள்ள யந்திரத்தை இங்கிருக்கும் வில்லால் அடித்து நொறுக்க வேண்டும். அவரே என் தங்கைக்கு கணவனாக முடியும், என்றான். திரவுபதியின் பேரழகில் மயங்கி, காம எண்ணத்துடன் வந்திருந்த அத்தனை அரசர்களின் சுருதியும் குறைந்து போனது. இந்த சுயம்வரத்துக்கு வந்திருந்த துரியோதனன், துச்சாதனன் மற்ற தம்பிகள் முகத்தில் ஈயாடவில்லை. சகுனியும் இந்த சுயம்வரத்திற்கு வந்திருந்தான். அவன் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான். தானத்தில் சிறந்த கர்ணன் அதை குறி வைக்கலாமா? குறி தவறாமல் இருக்க என்ன யுக்தியைக் கடைபிடிக்க வேண்டும் என கண்களை மேலே நோட்டமிட்டான்.மற்ற அரசர்கள் கதிகலங்கி விட்டனர். அர்ஜூனன் நிச்சயித்து விட்டான். திரவுபதி தனக்குத்தான் என்று.
0 கருத்து:
கருத்துரையிடுக