புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணத்தை நிறுத்தி அதில் இருந்து தன்னை மீட்கவேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் பதினாறு வயது சிறுவன் குழந்தை காப்பகத்தில் தஞ்சமடைந்தான். போலீசார் தலையீட்டின் பேரில் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசித்து வருபவர் பிரகாஷ் பிரஜாபாத், பதினாறு வயதான இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

13 வயது பெண்குழந்தையுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை தொடர்பு கொண்ட பிரகாஷ் தனக்கு நடைபெற இருக்கும் திருமணத்தில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தான். இதனையடுத்து அவர்கள் போலீசார் துணையுடன் சென்று திருமண சடங்குகளை நிறுத்தினர்.

இது குறித்து கருத்து கூறியுள்ள குழந்தைகள் காப்பக நிர்வாகி, பிரகாஷ் தன்னை சந்தித்து தனக்கு நடக்க உள்ள திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்று அழுதுகொண்டே கூறியதாக தெரிவித்தார். அவரது பெற்றோரிடம் இது குறித்து பேசியபோது இது எங்களின் குடும்பப்பிரச்சினை இதில் யாரும் தலையிடத் தேவையில்லை என்று கூறிவிட்டதாகவும் காப்பக நிர்வாகி கூறினார்.

பிரகாஷின் பெற்றோரை போலீசார் விசாரணை நடத்திய போது, தங்களின் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டது, அதனால்தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர்.

ஊர் மக்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்தது. இதனையடுத்து பிரகாஷின் பெற்றோர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ஆணுக்கு திருமண வயது 21 எனவும், பெண்ணுக்கு 18 எனவும் கூறுகிறது இந்திய திருமணச் சட்டம். இதனை மீறுபவர்கள் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்க முடியும். ஆனால் இன்றைக்கும் ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜோத்பூரில் நடந்த சம்பவமும் இதுபோன்ற ஒரு குழந்தை திருமணம்தான். 16 வயதான பிரகாஷ் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தைரியமாக நிறுத்தியுள்ளான்.

உரிய பருவம் வரும் முன்பே திருமணம் செய்து வைப்பதனால் குழந்தைகளின் கல்வியும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என்பதற்காகவே குழந்தை திருமணத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களிலும், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களிடையேயும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top