புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


23 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பொன்னாலை ஜே/170 கிராம சேவகர் பிரிவில் மின்சார விநியோக மார்க்கங்கள்,
கிராமிய வீதிகள், குடிதண்ணீர் விநியோகத் திட்டங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றை உரிய முறையில் மீளப் புனரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுங்கள். அரச அதிபரிடம் யாழ்.வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு, வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மீளக்குடியமர்ந்த மக்களிடம் காணி உறுதியோ மற்றும் அதற்குரிய வரை படங்களோ இல்லை. இதனை அந்த மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரதேசத்தில் 84 குடும்பங்களுக்கே சொந்தக் காணிகள் உள்ளன. ஏனையோர் காணியற்றவர்களாகவே உள்ளனர்.

இவர்களுக்கு இங்குள்ள பொது அமைப்புக்குச் சொந்தமான காணியை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் பெற்று வழங்குவதன் மூலம் அந்தப் பகுதிகளில் அதிகளவிலான மக்களை மீளக்குடியமர்த்த முடியும்.

மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் உதவிகளைப் பெறுவதற்காக தமது பங்கீட்டு அட்டைகளில் மாற்றம் செய்திருந்தனர். தற்போது சொந்த இடங்களில் மீளக்குடியமரும்போது மாற்றம் செய்த பங்கீட்டு அட்டைகளால் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

நீண்ட காலப் போரினால் இந்தப் பகுதியில் மின்சாரம், கிராமிய வீதிகள் மற்றும் குடிதண்ணீர் விநியோகத் திட்டங்கள் சீரழிந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை உரியமுறையில் மீளப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள். மீன்கள் அதிகமாகக் கிடைக்கின்ற காலங்களில் மீனைச் சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதற்குக் கருவாடு பதனிடல் மாற்று ஏற்பாடாக இருக்கின்றபோதும், பதனிடுவதற்குப் போதுமான அளவு உப்பு இங்கு இல்லை. கல்லுண்டாவில் முன்னர் இதற்குத் தேவையான உப்பைப் பெற்றுக்கொள்ளும் ஆலை இருந்தது.
இதனை மீள இயக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். மேலும் வலி.மேற்கு கடற்றொழிலாளர் சமாசத்துக்கு "பலநாள்" மீன்பிடி கலங்கள் இலகுகடன் அடிப்படையில் பெற்றுக் கொடுத்தால் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top