புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வழமைக்கு மாறாக, மிக அபூர்வமாக கட்சிக் கூட்டத்தில் தன்னைப் பற்றி மனம் திறந்துள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. “பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் தகப்பனாரை சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு
பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள்.

ஆனால், என்னைப்போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பனை எனக்கு இல்லை.

யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

இது என்னுடைய தனித்திறமை என்று நான் சொல்லமாட்டேன். இது விதி. தலையெழுத்து” என்று பேசினார் அவர்.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலார் ஜெயலலிதா பேசியபோது, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் அனைத்திந்திய என்ற வார்த்தையை எம்.ஜி.ஆர்.சேர்த்ததற்கான காரணத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஈட்டப்போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்” என்றார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. என்ன செய்யப் போகிறது, அவர்களின் எதிர்கால திட்டம் என்ன என்பது பற்றி விளக்கமாக அமைந்த பேச்சு என்பதால், ஜெயலலிதாவின் உரையை முழுமையாக தருகிறோம். சுவாரசியமாக உள்ளது, படித்துப் பாருங்கள்.

“இந்த நேரத்தில் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி நமக்கு என்ன செய்தது என்பதைவிட, கட்சிக்காக நாம் என்ன செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். ஒன்றாக இணைந்து கடமையாற்றினால் அ.தி.மு.க.வை வெல்வதற்கு இவ்வுலகில் எந்த இயக்கமும் இல்லை. இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, ஒரு இயக்கத்தின் ஆயுட் காலம் என்பதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, சில அரிய வாய்ப்புகள் எப்போதாவது வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அளப்பரிய சாதனை புரிகின்ற வாய்ப்பு எப்போதாவது ஒரு முறை தான் வரும்.

அப்படிப்பட்ட ஒரு நிலைமை நமக்கு அடுத்து நடைபெறுகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அமையப்போகிறது.

வருகின்ற வாய்ப்பை தவறவிட்டுவிட்டால், இந்த வாய்ப்பு மீண்டும் அடுத்தமுறை வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், அந்த வாய்ப்பு திரும்ப வராமலே போய்விடலாம்.

நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் நிர்ணயித்து கொள்ளவேண்டும். நம்முடைய பாதையை நாம் தான் வகுத்துக்கொள்ள வேண்டும். நம்மை பொறுத்தவரை யாரையும் சார்ந்திருக்க முடியாது. யாரையும் சார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

வேறு எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அந்தக்கட்சிகள் எல்லாம், வேறு பெரிய கட்சிகளை, தேசிய கட்சிகளை சார்ந்திருக்கலாம். அது அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்தது.

நம்மை பொறுத்தவரை யாரையுமே சார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுபோல், இன்றைக்கு தேசிய அளவில் பெரிய கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், ஒன்று காங்கிரஸ், மற்றொன்று பாரதீய ஜனதா. சிலர் காங்கிரசோடு சேர்கின்றனர், சில கட்சிகள் பாரதீய ஜனதாவோடு சேருகின்றன.

ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்தவரை தனித்தே நின்றாக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்திய அரசு, இந்தியாவை ஆளுகின்றது. கர்நாடகத்திலே பாரதீய ஜனதா அரசு ஆளுகின்றது. ஆனால், அங்கே காங்கிரசானாலும் சரி, கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆனாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட தந்துவிடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக இருக்கின்றன.

நமக்கு தண்ணீர் கிடைக்கக்கூடாது, நியாயமாக நமக்கு காவிரியில் கிடைக்கவேண்டிய பங்கு கிடைக்கக்கூடாது என்பதில் பாரதீய ஜனதாவும் முனைப்பாக இருக்கிறது, காங்கிரசும் முனைப்பாக இருக்கிறது.

இங்கே, தமிழ்நாட்டில் இல்லாத ஒரு ஒற்றுமை அங்கே கர்நாடகத்தில் இருக்கிறது. அண்மையில் எப்படியாவது தமிழகத்தின் உரிமையை பெறவேண்டும், காவிரி நீரை போராடி பெற வேண்டும் என்று திரும்பத்திரும்ப உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்து நான் போராடி கொண்டிருக்கிறேன்.

அதே வேளையில், அங்கே மத்தியில் கர்நாடகத்தை சேர்ந்த, இத்தனை காலமாக மந்திரியாக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மத்திய அமைச்சராக இருக்கின்ற கர்நாடகத்தை சேர்ந்த வீரப்பமொய்லி ஆகியவர்கள் கர்நாடகாவில் உள்ள பாரதீய ஜனதா முதல்-அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை அழைத்துக்கொண்டு, பிரதமரை சென்று பார்க்கிறார்கள்
அங்கே கர்நாடகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கின்ற காங்கிரஸ்காரர்களும் துணைக்கு செல்கிறார்கள்.

பிரதமரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி.க்களுடன், பாரதீய ஜனதா எம்.பி.க்களும் செல்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக பிரதமரை சென்று பார்த்து வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால், என்ன வந்தாலும் சரி, தமிழகத்திற்கு காவிரி நீரை நீங்கள் விட்டுவிடக்கூடாது.

இதில் கருணாநிதியும் சேர்ந்து இருக்கிறார். தி.மு.கவும் சேர்ந்து இருக்கிறது.

இங்கே தமிழகத்தில் ஏதோ காவிரி நீர் நமக்கு கிடைப்பதற்காக இவர்கள் அங்கே போய் பிரதமரை சந்தித்து வேண்டுகோள் வைத்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நடந்தது வேறு.

டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் போய் பிரதமரை பார்த்து என்ன நடந்தாலும் சரி, இந்த காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டு விடாதீர்கள் என்றுதான் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்வி.

இங்கு கேள்வி என்ற வார்த்தை எதற்காக சொல்கிறேன் என்றால், பத்திரிகைகள் எப்படியும் இதை வெளியிடுவார்கள். அதனால் கேள்வி என்று சொல்கிறேன்.

ஆக இதுதான் நடந்த உண்மை.

தி.மு.க.வை விட்டுவிடுங்கள். அது எப்படிப் பார்த்தாலும் அது முடிந்து போன கதை. அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டின் உரிமைகளை நாம் பெற வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தனியாக போட்டியிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலேயும் வெற்றி பெற வேண்டும்.

மத்தியில் நாம் சென்று அனைத்து முடிவுகளையும் நாம் செய்கின்ற, நாம் எடுக்கின்ற அதிகாரத்தை நாம் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று பேசினார் ஜெயலலிதா.
 
Top