அட்டையினாலே செய்யப்பட்ட சைக்கிளை இஷார் காஃப்னி என்ற இஸ்ரேல்காரர் உருவாக்கியிருக்கிறார். இந்த வகை அட்டை சைக்கிளை அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது
பெரிய மாற்றங்கள் வரும் என்கிறார் இஷார். ‘எனக்கு எப்பவுமே புதிய புதிய விஷயங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. வழக்கமான பொருட்களைக் கொண்டு செய்வதை விட அட்டையில் சைக்கிளை உருவாக்கினால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதினேன்’ என்கிறார் இஷார்.
அட்டை மிக பலவீனமானப் பொருள். அதன் பலத்தை கூட்ட கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகியிருக்கிறது இஷாருக்கு. இந்த அட்டை சைக்கிள் இன்னும் சில மாதங்களில் பெருமளவில் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சைக்கிளால் மிக ஏழ்மையான நாடுகளில் வசிப்பவர்களுக்கு கூட சைக்கிள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஐம்பது வயதாகும் இஷார், இது போன்ற வாகனங்களை வடிவமைப்பதில் நிபுணத்தவம் பெற்றவர். ‘அட்டையில் பெட்டிகளை மிக எளிதாக செய்துவிடலாம். ஆனால் ஒரு மிதிவண்டியை உருவாக்குவது என்பது சிரமமான காரியம். பல முயற்சிகள் தோல்விகளுக்குப் பிறகுதான் சரியான முறையில் அட்டையை பயன்படுத்த முடிந்தது’ என்கிறார் இஷார்.
மரக் கூழால் ஆனதுதான் அட்டை. அதை பத்தொன்பாதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்து அட்டைப் பெட்டிகள் செய்ய பயன்படுத்தினர். ஆனா இரும்பு போன்ற கடினமான உலோகங்களுக்கு மாற்றாக அட்டையை உபயோகிக்க முடியும் என்று இதுவரை யாரும் சிந்தித்ததில்லை.
வடிவத்தை உருவாக்கி வெட்டியெடுத்தப் பிறகு அதனுடன் சில ரகசிய பொருட்கள் கலக்கப்பட்டு தண்ணீரில் ஊறாத தன்மையையும் தீயில் எரியாத தன்மையையும் அதற்கு கொண்டு வருகிறார்கள். இப்படித் தயாரிக்கப்பட்ட பிரத்யேக அட்டையை பல மாதங்கள் தண்ணீர் தொட்டியி ஊறவைத்தும் அதன் வடிவம் மாறவில்லை. பலம் இழக்கவில்லை.
இந்த அட்டை மிதிவண்டியில் உலோகத்திலான பொருட்களே இருக்காது. சக்கரமும் கால் மிதியும் கூட சுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் காப்புரிமை பெறப்படாமல் இருப்பதால் எந்தப் பொருட்களை உபயோகிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது சொல்ல இயலாது என்கிறா இஷார்.
’இது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவரப் போகிறது. சைக்கிள் சந்தையையே மாற்றி அமைக்கப் போகிறது’ என்கிறார் நிம்ராட் எல்மிஷ். இவர் இஷாரின் தொழில் பங்குதாரார்.
‘உற்பத்தி செய்வதிலிருந்து ஊழியர்களின் ஊதியத்திலிருந்து எல்லாமே மாறிவிடும். இதை உற்பத்தி செய்ய தானியங்கி இயந்திரங்கள் போதும். ஒய்வுப் பெற்ற முதியவர்கள், மாற்று திறனாளிகள் கூட இந்தத் தயாரிப்பில் ஈடுபடலாம்’ என்கிறார் எல்மிஷ்.
இந்த சைக்கிள் இருபது டாலர் விலைக்கு கிடைக்குமாம். அதுவும் கடைக்காரர்களுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக இந்த விலையாம். இன்னும் சில மாதங்களில் இஸ்ரேலில் இதன் உற்பத்தி துவங்கப் போகிறது
0 கருத்து:
கருத்துரையிடுக