இஸ்ரேல் நாட்டின் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பாலஸ்தீன கைதிகளின் உயிரணுவை கடத்தி வந்து செயற்கை முறை மூலம் கருத்தரித்து பிரசவிக்கும் பாலஸ்தீன
பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
இஸ்ரேலின் அண்டை நாடான பாலஸ்தீனத்தை சேர்ந்த சிலர், இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இச்சம்பவங்களில் பிடிபடும் பாலஸ்தீனியர்களில் பலர் தேச துரோக குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனார்.
சராசரியாக இஸ்ரேல் குடிமக்களுக்கு சிறைகளில் வழங்கப்படும் எவ்வித சலுகையும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது.
இஸ்ரேலிய கைதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சிறை வளாகத்தினுள் உள்ள குடியிருப்புகளில் தங்களது உறவினர்களை சந்தித்து பேசவும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட கைதிகள், தங்களின் மனைவியுடன் தனிமையில் இருக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால், பாலஸ்தீன கைதிகளில் எவருக்கும் இவ்வகை அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதனால், சிறைவாசம் அனுபவிக்கும் பாலஸ்தீன கைதிகள் தங்களின் அடுத்த தலைமுறைக்கான வாரிசுகளை உருவாக்க வாய்ப்பளிக்கப்படாமல் சிறைக்குள்ளேயே வாழ்நாளை கழித்து பிணமாக தான் விடுதலை ஆகின்றனர்.
கடந்த 1997ம் ஆண்டு இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டு வைத்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அல் சிபன் என்ற பாலஸ்தீனியர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவருக்கு 27 ஆயுள் தண்டனைகளும் தனியாக 25 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அல் சிபன் கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி தலால் அல் சிபனுக்கு 18 வயது. கடந்த 16 ஆண்டுகளாக கணவரை பிரிந்து கற்பொழுக்கத்தை பேணிக் காத்து வாழ்ந்து வந்த அவர், கணவர் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கையில் சென்ற ஆண்டு வரை காத்திருந்தார்.
ஆனால், 27 ஆயுள் தண்டனைகளை அனுபவித்துவிட்டு விடுதலையாகும் அவரால் வாரிசை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்ததால் ஒரு புதிய முடிவை மேற்கொண்டார்.
கணவர் செய்த தவறுக்காக அவரது மனைவி உறவுகள் இன்றி ஏன் தவிக்க வேண்டும் என்று யோசித்த அவர் சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை கடத்தி வர ஏற்பாடு செய்தார்.
அந்த உயிரணுவின் மூலம் செயற்கை முறையில் கருத்தரித்த அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதே வழியை இஸ்ரேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சில பாலஸ்தீனிய கைதிகளின் மனைவிகளும் கடைபிடிக்கின்றனர்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு டொக்டர் இந்த செயற்கை கருத்தரிப்பு முறையை இலவசமாகவே செய்து வருவதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து கடத்தி வரும் உயிரணுக்களின் மூலம் கருத்தரித்ததாக கூறும் பெண்கள் அவை எதன் மூலம், எப்படி? யாரால்? கடத்தி வரப்பட்டது என்ற ரகசியத்தை வெளியிட மறுத்து விட்டனர்.
இந்த உயிரணுக்களில் சில செயற்கை கருத்தரிப்பு மையத்தை வந்து சேருவதற்குள் வீரியம் இழந்து கெட்டுப்போவதால் பல கருத்தரிப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், செயற்கை கருத்தரிப்புக்கு உபயோகிக்கப்படும் உயிரணு, கருத்தரிக்க விரும்பும் பெண்ணின் கணவருடையது தானா? என்பதை உறுதிபடுத்த முடியாத நிலை நீடிப்பதாகவும், அந்த பெண்ணின் உறவினர்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே இவ்வகையிலான செயற்கை கருத்தரிப்பு செய்யப்படுவதாகவும் இந்த மையத்தின் டொக்டர் ஒருவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் உள்ள கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர்களின் கூற்றின்படி, சாதாரண அறையின் வெப்ப நிலையில் சுத்தமான புட்டிகளில் அடைத்து வைக்கப்படும் ஆணின் உயிரணு சுமார் 48 மணி நேரம் வரை வீரியத்துடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக