பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால், அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்’ என, மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்த, அவசர சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், கணவன் உடலுறவு கொண்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்’ என, தற்போது அமலில் உள்ள, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376 ஏ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சட்டப் பிரிவை நீக்கும்படி, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
“மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் பலாத்காரமாகவே கருதி, கூடுதல் தண்டனை வழங்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளது.
இருந்தாலும், தற்போதைய சட்டப் பிரிவு தொடர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், தற்போதுள்ள, 2 ஆண்டு தண்டனை என்பதை, 7 ஆண்டாக உயர்த்த தீர்மானித்துள்ளது.
பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், சட்டப் பிரிவு, 376ஏ – தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376ஏ-ன் கீழான குற்றம், இதுவரை, ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால், இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக