ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன்
கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.
இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது தெரியவந்தது.இதன் மூலம் ஆந்தைகளின் கழுத்து அதிகபட்சம் திரும்புவதால், அவற்றின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதுடன், அதிக அளவில் நாளங்களில் தேங்கும் ரத்தம், அளவில் பெரிதான அவற்றின் மூளை மற்றும் கண்களின் செயல்பாட்டுக்கு பெரிய அளவில் உதவுவது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம், விபத்துகளில் சிக்கி கழுத்து முறிவு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்படும் என, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக