மட்டக்களப்பில் குழந்தை அழுதமையால் மனைவியை மீட்டுத்தர கணவன் கோரிக்கை
ஒன்றரை வயது குழந்தையை விட்டு விட்டு வெளிநாடு செல்வதற்காக தாய் கொழும்புக்கு பயணமானதால் தனது தாயை கேட்டு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதால் பரிதவிக்கும் பச்சிளம் பாலகனை பாதுகாப்பதற்காக தனது
மனைவியை மீட்டுத்தருமாறு கணவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
மட்டக்களப்பு ஐயன்கேணியைச் சேர்ந்த அன்டனி-தமிழ்ச்செல்வி தம்பதிகளின் யதுசன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை தாய் வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு சென்றதன் காரணமாக குழந்தை தொடர்ச்சியாக தாயை கேட்டழுவதால் குழந்தை மிகமோசமான உடல்,உளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு குறித்த குழந்தையுடன் வருகைதந்த அன்டனி கிங்ஸ்லி என்பவர் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு தனது மனைவி வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளதால் தனது மூன்றாவது ஆண் குழந்தை தாயைக் கேட்டு அழுவதுடன் அவர் மிகமோசமான உடல்,உளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனது மனைவியை வெளிநாடு செல்லாமல் தடுத்து அவரை மீட்டுத்தருமாறு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக பிரதேச சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தாயை வெளிநாடு செல்லாமல் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக செங்கலடி ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.
வறுமை,குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் வீதம் அதிகரித்துக்கொண்டு செல்வதன் காரணமாக தொடர்ச்சியாக பல குழந்தைகள் அனாதரவாக்கப்படுவதாகவும் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் இது வரை தண்டனைச் சட்டம் எதனையும் கொண்டுவராமல் இருப்பதனாலேயே இவை தொடர்ந்துகொண்டு இருப்பதாக கூறுகின்றார் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் அவர்கள்.
குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களை தடுப்பது யார்? பாதிக்கப்படும் எதிர்காலச் சந்ததியினருக்கு என்ன தீர்வு? இதை தடுக்க சட்டங்கள் மட்டும் போதுமா? மிகப்பெரிய சமூகச் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்களின் வெளிநாட்டு பயணத்தை தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
0 கருத்து:
கருத்துரையிடுக