பழம் பெரும் நடிகை ராஜசுலோசனா காலமானார்
தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகை ராஜசுலோசனா இன்று(மார்ச் 5) அதிகாலை காலமானார்.
அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த ராஜசுலோச்சனா(வயது 77), அவ்வப்போது இந்தியா வருவார்.
மடிப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் தங்குவார். இந்த முறை அவர் வந்தபோது கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
சினிமா வாழ்க்கை 16 வயதில் ஏவிஎம் நிறுவனத்தின் கம்பெனி நடிகையானார். அந்நிறுவனம் தயாரித்த ‘சத்தியசோதனை’ என்ற படத்தில் அறிமுகமானார்.
அரசிளங்குமரி, ராஜாராணி, ரங்கோன் ராதா, நல்லவன் வாழ்வான், சேரன் செங்குட்டுவன், குலேபகாவலி, பாலாபிஷேகம் உள்பட 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தமிழில் அம்மா வேடங்களில் நடித்தார்.
சிம்பு நடித்த “எங்க வீட்டு வேலன்”தான் அவர் நடித்த கடைசிப் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
முதல் கணவருக்கு ஒரு மகனும், இரண்டாவது கணவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.
மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
திரையுலகில் இவரது நடனத்திற்கென்று ரசிகர்கள் நிறைய பேர் இருந்தனர். அமுதும் தேனும் எதற்கு, ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா? என்ற பாடல்களும் இவர் ஆடிய நடனம் புகழ் பெற்றவை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக