புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது
வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம்.
பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி  வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, பட்டம் விடுபட்டதுபோல் ஆவி வடிவம் தன்னை ஸ்தூல சரீரத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்ட உயிரானது சடலத்தின் அருகேயே மிதந்துகொண்டிருக்கும். இப்படி மிதந்துகொண்டிருக்கும் பொழுது இதை ஆவி உரு (Wraith) என்பர்.
இது மனிதனின் தூல சரிரம் தவிர்ந்த மற்றைய சரீரங்களின் வடிவம் என்பதால் அதே வடிவத்தில் அல்லது சிதைந்துகொண்டிருக்கும் நிலையில் ஆவி உருவாக சிலருக்குத் தென்படுவதுண்டு. இது செங்கரு நீலநிறத்திலோ அல்லது வெண்மை கலந்த நீல நிறத்திலோ அல்லது பிரகாசமான ஒளியாகவோ பனிப்படலம் போன்று தென்படும். உடலை புதைக்கும் மயானங்களில் இவ்வடிவங்களைப் பலர் கண்டிருக்கிறார்கள். இந்த ஆவி வடிவம் உடலை விட்டு நீங்கும்பொழுது அதை பலர் பார்த்திருக்கிறார்கள். இவ்வடிவத்தை கூர்மையான ஒளி வாங்கிகளால் விஞ்ஞானிகள் பதிவுசெய்திருக்கிறார்கள். இறப்பதற்கும் இறந்தபின்னும் மனிதஉடலை நிறுத்துப்பார்த்து இப்பனிப்படலம் அரை அவுன்சுக்கும் முக்கால் அவுன்சுக்கும் இடைப்பட்ட நிறையுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
உடலைவிட்டு உயிர்நீங்கிய பின்னர் அந்த உயிரானது (ஆவிவடிவம்) தனது உணர்வை இழந்துவிடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற “நான் இருக்கிறேன்” என்ற நினைவு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. மரணம் ஏற்பட்டவுடன் சில் நிமிடங்களுக்கு சுய உணர்வு இல்லாத ஒரு நிலை இருக்கக் கூடும். நித்திரையில் இருந்து விழித்துக்கொள்வது போல் சுயநினைவு வந்துவிடுகிறது. சுயநினைவு வந்தவுடன் பலருக்குத் தாம் இறந்துவிட்டோம் என்றுகூடத் தெரிவதில்லை. இறந்தவர் ஆவி வடிவில் இருந்துகொண்டு உறவினர்களையும் நண்பர்களையும் தொட்டுத் தொட்டுப் பார்ப்பார். தான் தொடுவதை அவர்களால் உணர முடியவில்லை என்று தெரிந்ததும், இது கனவல்ல என்று நிச்சயப்படுத்திக்கொண்டு “ஓகோ நான் இறந்துவிட்டேன் போலிருக்கிறது” என்று புரிந்துகொண்டு விடுகிறார்.

சிலர் ஆவி வடிவில் இருந்துகொண்டு தங்கள் உடலையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சிந்தனைத்தெளிவு இல்லாதவர்களும் மரணத்தைப்பற்றிப் பயங்கரகமான கற்பனைகளில் ஈடுபட்டவர்களும் இறந்தவுடன் குழப்பமானவொரு நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்வர்களை ஆவியுலகில் இருக்கும் அண்மையில் இறந்த உறவினர்களோ, நண்பர்களோ அல்லது புதிதாக வருபவர்களை நேசக்கரம் நீட்டி வரவேற்பதற்கென்றே ஆவி உலகில் இயங்கிவரும் தொண்டர்களோ வரவேற்று இறப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கி ஆசுவாசப்படுத்துவார்கள். ஆன்மீக வளர்ச்சி பெற்றவர்களினதும் சாவைப்பற்றிச் சரியான விளக்கமுள்ளவர்களினதும் ஆத்மாக்கள் ஆவி வடிவங்களை உடனடியாக உதறிவிட்டுப் போய்விடுவர். சாதாரண ஆத்மாக்கள் தங்கள் ஆசைகளுக்கும் பாசங்களுக்கும் ஏற்ப சில மணித்தியாலங்களோ சில நாட்களோ ஆவி வடிவத்தில் தங்கி நிற்பர்.
ஆவிவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட வாழ்க்கை முழுவதும் மூலை முடுக்குகள் உட்பட நம் மனக்கண் முன் படக்காட்சி போல் ஒருகணம் தோன்றி மறையும். நாம் பெற்ற அனுபவங்கள் நாம் புரிந்த நல்வினை, தீவினைகள் நாம் அடைந்த வெற்றிகள் தோல்விகள் நமது விருப்புவெறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஆத்மாவின் சூட்சம ஒளியில்  பதிவாகிவிடுகிறது. காரண சரீரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இப்பதிவின் வினைப்பயனாகவே நமது அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆவிவடிவம் உடலைவிட்டு நீங்கும்பொழுது பக்கத்தில் நிற்பவர்கள் அழுது புலம்பி கூச்சலிடாமல் இறப்பவர்கள் நிம்மதியாக இறக்கவிடவேண்டும். பூரணமான அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இறந்துகொண்டிருப்பவர் கடவுள் நம்பிக்கை உடையவராயின் அவருக்கு விருப்பமான பிரார்த்தனை கீதங்களை தாழ்ந்த குரலில் இசைத்தல் நலம். “சேடம்” இழுக்கும் பொழுது திருப்புகழ் பாடும் வழக்கம் இப்படித்தான் ஏற்பட்டது.
இறந்தவரின் நினைவுகள் ஸ்தூல சரீரத்தை விட்டு விலகி முதலில் ஆவி வடிவத்திலும் பின்னர் சூட்சும சரீரத்திலும் தற்காலிகமாகத் தங்கி நிற்கிறது. அங்கிருந்து அது எங்கு செல்கிறது என்பதை பின்னர் பார்ப்போம்.
மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் மரணத்தின் பின்னர் மறுஉலகில் தொடரும் நிகழ்ச்சிகளை “நடைபெறவேண்டிய காரியங்கள்” என்ற மனப்பாங்குடன் ஏற்றுக்கெண்டு விடுகிறார்கள். வெகுசிலர் மட்டுமே உடலை உதறிவிட விருப்பமில்லாமலும் சட உலகின் தொடர்புகளை அறுத்துக் கொள்ள இயலாமலும் அவஸ்தைப்படுகிறார்கள். குடியிருந்த வீட்டை (ஸ்தூல சரீரத்தை) விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியினாலும் உலகப்பற்று அதிகமாக உள்ள காரணத்தாலும் ஒரு துன்பகரமான மனநிலையில் இருந்துகொண்டு அல்லல்படுகிறார்கள். இவர்களே பலகாலம் ஆவி உருவில் சட உலகில் அலைபவர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top