வேலூர் மக்கான் சிக்னல் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவருடன் தங்கியிருந்தவரே இந்த கொலையை செய்திருப்பார் என்று சந்தேகப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் விடுதியில் கொடுத்திருந்த ஓசூர் முகவரியை வைத்து துப்பு துலங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று தெரிய வந்துள்ளது.
விடுதியில் தங்கியது ஓசூர் அடுத்த பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் பசப்பா(55). இவரது இரண்டாவது மனைவி நீலம்மாள்(40), இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. முனியப்பா (23) என்ற மகன் உள்ளார். நீலம்மாவுக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பசப்பா தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பும் தகராறு நடந்துள்ளது. இதற்கிடையில் திருப்பதி செல்வதற்காக நீலம்மாவுடன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஓசூரில் இருந்து பேருந்தில் பசப்பா புறப்பட்டு உள்ளார். நள்ளிரவு வேலூர் வந்ததும் இருவரும் விடுதியில் தங்கியுள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி தான் கொண்டு வந்த கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பசப்பா தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் அல்லது சென்னைக்கு பசப்பா தப்பிச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். தப்பிச் சென்றுள்ள பசப்பாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.