புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒத்தக் கருத்து உடையவர்களை தேடி நட்புக் கொள்ளவும், பிரிந்த நண்பர்களுடன் இணையம் வழியாக இணைந்திருக்கவும் உருவாக்கப் பட்டதுதான் ஃபேஸ்புக் சமூக வலைதளம்.

இளைஞர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக், தற்போது தன் வட்டத்தை விரிவுப் படுத்திக் கொண்டுள்ளது. பெரிய, பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் நிறுவனங்களின் விளம்பரத்துக்காக ஃபேஸ்புக்கை பயன்படுத்த தொடங்கி விட்டன. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

ஆனால், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நாம் செய்யும் ஒவ்வொரு அசைவும், கண்ணாடி அறையினுள் இருந்து உடைகளை மாற்றிக் கொள்வது போல்தான்; நம் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நம்மையும் அறியாமல் பலரும் கண்காணித்து வருகிறார்கள் என்பதனை பயனீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் பொழுதை, சச்சரவுகளின்றி இனிமையாக ஆக்கிக் கொள்ள சில யோசனைகள்:

(1) சுய விவரங்களை எந்த அளவு இயலுமோ, அந்த அளவு குறைவாக பதிய வேண்டும். நாம் பதியும் சுய விவரங்கள், நம் நண்பர்கள் நம்மை தேட நேரிட்டால் அவர்களுக்கு அடையாளம் காட்டும் அளவு இருந்தால் மட்டும் போதும். நம் பெயர், பிறந்த தேதி, கல்வி கற்ற பள்ளி, கல்லூரி; வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றை மட்டும் பதிந்தால் போதும். நம் தொலைபேசி எண்களை எக்காரணம் கொண்டும் ஃபேஸ்புக்கில் பகிரக் கூடாது. தொடர்புக்கு தேவை பட்டால் மின்னஞ்சல் முகவரியை பதியலாம்.

(2) ஃபேஸ்புக்கில் நம் சுயவிவரங்கள் (Profile), நாம் எழுதும் கருத்துக்கள் (Status messages) போன்றவற்றை நம் நண்பர்கள் மட்டும் பார்க்கும் படி பிரைவசி செட்டிங்க் அமைத்துக் கொள்ள வேண்டும். நம் நட்பு விழைவோரைக் கூட, முடிந்த அளவு வடிகட்டுவது நல்லது. அதாவது நம் நட்பு விழைபவர் உண்மையாகவே நமக்கு தெரிந்தவரா அல்லது குறைந்தபட்சம் நம் நண்பனின் நண்பனா; அல்லது அவருக்கும் நமக்கும் ஏதாவது பொதுவான விஷயம் உள்ளதா (ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம்) போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் நட்பு கோரிக்கையை (Friend request) நாம் ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என தீர்மானிக்க வேண்டும்.

(3) சொந்த விஷயங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வது முட்டாள்தனம். ‘நான் இந்த தேதியில், இந்த ஊருக்கு போகிறேன்…10 நாட்கள் கழித்துதான் ஊருக்கு திரும்புவேன்…’ போன்ற இடுகைகள், சமூக விரோதிகளுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பது போல் ஆகி விடும். நாம் வெளியூர் போகிறோம் என்பதனை ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு தெரியப் படுத்த விரும்பினால், அவர்களுக்கு மெசேஜ் செய்யலாம். இதனால் சம்மந்தப் பட்ட ந(ண்)பர் மட்டும் படிக்க முடியும் அல்லவா?

(4) நம்முடைய புகைப்படங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வலையேற்றம் (upload) செய்வதை தவிர்க்கலாம். நண்பர்கள் நம்மை அடையாளம் கண்டுகொள்ள விரும்பினால், ஒரே ஒரு புகைப்படம் வேண்டுமானால் வலையேற்றம் செய்து வைக்கலாம். ஆண்களுக்கு கூட இந்த விஷயத்தில் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை; பெண்களுக்கு மிக அதிகம். ஃபேஸ்புக்கில் நாம் பகிரும் புகைப்படங்களை நமக்கு தெரியாமல் யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் (download) செய்து தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு. பெண்களின் புகைப்படங்களை கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் உலவ விடும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. வரும் முன் காப்பதுதானே நல்லது.

(5) ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரிச்சயம் இல்லாத மூன்றாவது நபர்களுடன் அளவுடன் நட்பு கொள்வது சிறப்பு. நம் சொந்த விஷயங்களை அவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஃபேஸ்புக் மூலம் காதல் வலை விரிப்பவர்களிடம் இரு பாலாரும் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் பணத்தையும், பெண்களாக இருந்தால் கற்பையும் பறிக் கொடுக்க ‘இணைய வழி காதல்’ வழி வகுத்து விடும்.

(6) நாம் எழுதும் கருத்துக்களை பலரும் படிக்கின்றனர்; பகிரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பலரும் பார்க்கின்றனர் என்ற விழிப்புணர்வு எப்பொழுதும் இருத்தல் வேண்டும். தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்தி நாம் கருத்து எழுதினாலோ, வேறு யாராவது பகிர்ந்துக் கொண்ட ஆபாசமான புகைப்படம் / வீடியோக்களுக்கு பழக்க தோஷத்தில் Like கொடுத்து வைத்தாலோ, நம் நட்பு வட்டாரத்தில் நம்மைப் பற்றிய இமேஜ் முற்றிலும் பாழாகி விடும்.

மொத்தத்தில், நம் பாதுகாப்பும், சமூக அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்புணச்சியும் நம் கையில்தானே உள்ளது என்பதை நினைவில் கொண்டிருந்தால் ஃபேஸ்புக் நமக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top