புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்போது நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் சிராஜ் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் கடந்த சில தினங்களாக வித்தியாசமான பிரகாச ஒளிர்வை அவதானித்து வருகின்றார்கள். இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிலாபம், இரணவில, தனமல்வில, பண்டாரவெள ஆகிய பிரதேசங்களில் இருந்து இந்த ஒளிர்வு தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற ஒளிநாடாக் காட்சிகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இவ்வாய்வில், “அந்த ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது” என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

இந்த நாட்களில் வியாழன் கிரகம் மிகவும் பிரகாச ஒளிர்வாக இருக்கின்றது. அதன் காரணமாகவே அதன் ஒளிர்வை எம்மால் பார்க்க முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச வானிலையாளர்கள் தற்போது வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. கடந்த 2ம் திகதி பூமிக்கும், வியாழன் கிரகத்திற்குமிடையிலான தூரம் 609 மில்லியன் கிலோ மீற்றர்களாக இருந்தது.

இதுவே மிக அண்மித்த தூரம். இக்கிரகம் இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டிலேயே இவ்வாறு நெருங்கி வரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒளிரும் விண்கற்களை இலங்கையிலும் இன்று முதல் காணும் வாய்ப்பு

விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறைப் பேராசிரியருமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் 17ம் திகதி வரையும் இலங்கையர் விண்கற்களைப் பார்க்கலாம். என்றாலும் அதனை 13ம், 14ம் திகதிகளில் வெற்றுக் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியும்.

அந்த வகையில் இன்று மாலை முதல் மறுநாள் அதிகாலை வரையும் வெற்றுக் கண்களால் இவ் விண்கற்களைப் பார்க்கலாம். ஆகாயம் கடும் இருட்டாக இருக்கும் போது இக்கற்கள் மிகத் தெளிவாகத் தென்படும்.

இன்று மாலை முதல் இரவு வரை கிழக்கு புறமாகவும் நள்ளிரவில் ஆகாய உச்சிப் பகுதியிலும் அதிகாலையில் மேற்கு பகுதியிலும் இக்கற்களைப் பார்க்கலாம் என்றாலும், மறு நாள் அதிகாலை 1.03 மணிக்கு மிகத் தெளிவாகத் தென்படும்.

இக்காலப் பகுதியில் மணித்தியாலத்திற்கு நூறு கற்கள் வரை பார்க்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

விண்கற்கள் செறிவாக இருக்கும் அண்டவெளி பாதையில் புவி பயணம் செய்கின்றமையே இவ்வாறு விண் கற்களை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றமைக்கு காரணம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top