இந்தியா சமீபத்தில் 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை விண்ணில் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து வெற்றிகண்டது. இந்நிலையில், நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் ஏவுகணையின் பரிசோதனை தூரத்தை 9,000 கிலோ மீட்டரில் இருந்து 5,000 கிலோ மீட்டர் ஆக...
குறைக்கப்பட்டதாக சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் எனும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இப்பத்திரிகை, அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு முன்பே சீனா இந்தியாவை காட்டிலும் அணுசக்தியிலும், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் பல மடங்கு முன்னேறியுள்ளதாகவும், அவைகள் மிகவும் நம்பகத்தன்மை மிக்கதாக இருப்பதாகவும், எனவே இந்தியாவிற்கு இது போன்ற ஏவுகணை சோதனை தவிர்க்க இயலாத ஒன்று என முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் அப்பத்திரிக்கையில் அக்னி-5 ஏவுகணை முதலில் 9,000 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், நேட்டோ நாடுகளின் நிர்பந்தத்தால் அது 5,000 கிலோ மீட்டர் ஆக இந்திய அரசு குறைத்ததாகவும் அப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய-சீன உறவு குறித்து அப்பத்திரிக்கையில், சர்வதேச நாடுகள் இவ்விரு நாடுகளையும் எதிரி நாடுகள் போல சித்தரிக்க முயல்கிறது.
எனவே இதை இவ்விரு நாடுகளும் இணைந்து முறியடிக்க வேண்டும் எனவும் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு பாலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவும், சீனாவும் இணைந்திருந்தால் ஆசிய கண்டம் வலிமையானதாக இருக்கும் எனவும், இல்லையென்றால் ஆசிய கண்டம் பலவீனமான ஒன்றாகவே இருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் அப்பத்திரிக்கையில், இந்தியா விண்வெளி திட்டங்களில் சீனாவைவிட பின் தங்கியுள்ளதாகவும், தனது முக்கியமான ராணுவ தளவாடங்களில் 80 சதவீதம் அளவிற்கு பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்வதாகவும், அந்நாடுகள் ராணுவதளவாடங்களை தரவில்லை என்றால் இந்தியா இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக