டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று
குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த 1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு 500, 1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
0 கருத்து:
கருத்துரையிடுக