இந்தியாவில் 15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம்
.சென்னை அருகே பட்டாபிராமில் டுடோரியல் சென்ற மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் கட்டாய தாலி கட்டி, பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்தவர் முருகன் மகள் லீலா வயது 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் முகப்பேரில் உள்ள ஒரு டுடோரியலில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி காலை டுடோரியலுக்கு சென்ற லீலா வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து லீலாவின் பெற்றோர் உறவினர் வீடுகளிலும், தோழியின் வீட்டிலும் தேடி வந்தனர். எங்கு தேடியும் லீலாவை கண்டுபிடிக்க முடியாத பெற்றோர்கள், பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பட்டாபிராம் சோராஞ்சேரி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் சரவணன் (20) லீலாவை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் தேடிய போலீசார், சனிக்கிழமை மாலை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை பிடித்தனர். அவரிடம் இருந்து லீலாவை மீட்டனர். இருவரையும் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது லீலாவை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று கட்டாயதாலி கட்டி பலாத்காரம் செய்ததாக சரவணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து லீலாவை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர். சரவணனை கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.