புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காவலாளியின் மகளாக வாழ்க்கையை தொடங்கி என்ஜினீயராக உயர்ந்தவர். சென்னையில் பணியாற்றி வந்த இவர் கடந்த மாதம் தீபாவளிக்காக சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றார். 13-ந்தேதி புத்தாடை அணிந்து பட்டாசுகளுடன் ஒளி வெள்ளத்தில் தீபாவளியை கொண்டாடிய
வினோதினி. இதுதான் நாம் கண் குளிர கண்டு களிக்கும் கடைசி தீபாவளி என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

மறுநாள் காலையில் காலன் ரூபத்தில் வந்த அவரது ஒருதலைக்காதலனால் இன்று அவரது வாழ்க்கையே சிதைந்து போனது. வினோதினியை விரட்டி விரட்டி காதலித்த சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசி தாக்கியதில் அவரது அழகு முகம் கருகியது.

துணியால் சுற்றப்பட்ட நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் துடிதுடித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. அவரது முகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முகம் முழுவதும் வெந்து விட்டது. இரு கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து விட்டதால், அதை சரி செய்ய பலகட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு ஒரு தடவை ஆபரேஷன் நடத்தப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து ஆபரேஷன் செய்யவேண்டி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வினோதினியின் தந்தை ஜெயபால் பள்ளி காவலாளியாக இருந்ததால் வீட்டில் அதிக வருமானம் இல்லை.

வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்த பின்னர் தான் வருமானம் வர ஆரம்பித்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அந்த வருமானமும் நின்றுவிட்டது. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெற்றோர் தவிக்கின்றனர். அவருக்கு உதவுவதற்காக இந்தியன் வங்கியில் தனிகணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஓரளவு பணம் வந்துள்ளது. அதை வைத்து தான் செலவு செய்து வருகிறார்கள்.

இதுவரை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் செலவாகி உள்ளது. ஆனாலும் இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

வினோதியை அருகில் இருந்து கவனித்து வரும் அவரது தாய் மாமா ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

வினோதினி தந்தை ஜெயபாலும், ஆசிட் வீசிய சுரேசும் நண்பர்களாக இருந்தனர். ஜெயபாலை பார்ப்பதற்கு சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவான். அவன் வினோதியை ஒருதலையாக காதலித்து இருக்கிறான். ஒருநாள் திடீரென வினோதினியை பெண் கேட்டான். ஆனால் பெண் கொடுக்க ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும் மறுத்து விட்டனர்.

வினோதினியும் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அதனால் அவன் இப்படிபட்ட ஒரு இழிவான செயலை செய்து விட்டான். அப்பாவி பெண் மீது ஆசிட் வீசி அவரது எதிர்கால வாழ்க்கையை சீரழித்த அவனை சும்மா விடக்கூடாது.

இந்த காரியத்தை அவன் ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது. வினோதினியை பின்தொடர்ந்து அவரது நடவடிக்கையை கவனித்து யாரோ சிலர் சுரேசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் வினோதினி பஸ் நிலையம் வருவது தெரிந்து ஆசிட் வீசியிருக்கிறான். அவனுக்கு உதவியவர் யார் என்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோதினிக்கு இன்னும் 6 மாதம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சிகிச்சைக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ஓரளவு பணம் வந்துள்ளது. காரைக்காலை சேர்ந்தவர்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி சார்பில் ரூ.25 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட தி.மு.க.வும் ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. ஆனால் புதுவை அரசு சார்பில் இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. உதவியும் செய்யவில்லை. வினோதினி மருத்துவ செலவுக்கு தாராளமாக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்னதான் உதவிகள் குவிந்தாலும் வினோதியின் வாழ்க்கை... இனி?

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோதி 1 1/2 மாதங்களுக்கு பின்னர் வாய் திறந்து பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் மத்திய மந்திரி நாராயணசாமி ஆஸ்பத்திரிக்கு சென்று வினோதினியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது மெதுவாக பேசிய வினோதினி, என் மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் வசதி இல்லாமல் தவிக்கும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கோரியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமியும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
 
Top