”என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பி இருக்கிறார். நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விஷயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது நான் தனிமையில்
இருந்தாலும், பிஸியாக இருக்கிறேன். இது, எனக்கு பிடித்து இருக்கிறது” என்று நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார்.
டான்ஸ் மாஸ்டராக திரையுலக வாழ்க்கையை தொடங்கி நடிகராகிய பிரபுதேவா தற்போது இயக்குனராக உயர்ந்திருக்கிறார். இப்போது, இந்தி பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்தி பட உலகம் பற்றியும், தனது சொந்த வாழ்க்கை பற்றியும் பிரபு தேவா கூறியது:
இந்தி பட உலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதை பெருமையாக கருதுகிறீர்களா?
அது ஏன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தி பட உலகுக்கு முன்பே வர ஆசைப்பட்டேன். சரியான நேரத்தில் என் ஆசை நிறைவேறி இருக்கிறது. நான், பெரிய இயக்குனர் அல்ல. என்னை விட பெரிய இயக்குனர்கள், சாதித்தவர்கள் நிறைய பேர் இந்தி பட உலகில் இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மும்பைக்கு நீங்கள் குடிபெயர்ந்ததற்கு என்ன காரணம்?
அதற்கு இந்தி பட வேலைகள்தான் காரணம். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்-நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது.
மும்பையில் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?
ஜுஹு பீச்சில் உள்ள போனிகபூரின் பழைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறேன். அந்த வீட்டை அவர் பரந்த மனதுடன் எனக்கு கொடுத்து இருக்கிறார்.
உங்கள் சின்ன வயது அனுபவம் பற்றி கூற முடியுமா?
பள்ளி பருவத்தில் படிப்பில் நான் மிக மோசமான மாணவனாக இருந்தேன். பதினொன்றாம் வகுப்பில், பெயில் ஆகிவிட்டேன். பள்ளியில் பெயில் ஆன ஒரே மாணவன் நான்தான். அதன்பிறகு என் தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து விட்டேன்.
நீங்கள் ஒரு டான்ஸ் மாஸ்டராகவோ, நடிகராகவோ, இயக்குனராகவோ வரவில்லை என்றால், என்னவாகி இருப்பீர்கள்?
ஏதாவது ஒரு அலுவலகத்தில் பியூன் ஆகியிருப்பேன். அல்லது போக்குவரத்து போலீஸ்காரராகி இருப்பேன். என்னிடம் உள்ள குறைந்த தகுதிக்கு இதுதான் நடந்திருக்கும்.
உங்கள் திருமண வாழ்க்கை முறிந்து போனதற்கு நயன்தாராதான் காரணம் என்று பொதுமக்கள் திட்டுகிறார்களே?
அது மிகப்பெரிய தவறு. யாரும், எதற்கும் காரணம் அல்ல. கடவுள் காட்டிய வழி இது. இதை கடவுள் விரும்பி இருக்கிறார். இந்த விஷயத்தில், எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பி இருக்கிறார். நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விஷயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது நான் தனிமையில் இருந்தாலும், பிஸியாக இருக்கிறேன். இது, எனக்கு பிடித்து இருக்கிறது.
உங்கள் மனைவி ரமலத்துடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
எங்கள் திருமணம், காதல் திருமணம். எது நடந்தாலும் அது கடவுள் விருப்பப்படி நடந்தது என்று புரிந்து கொண்டேன். எங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை கிடையாது. ஆனால், என் மகன்கள் ரிஷி ராகவேந்திரா, ஆதித் ஆகிய இருவருடனும் தொடர்பில் இருக்கிறேன். தினமும் அவர்களுடன் பேசுகிறேன். அவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக இங்கே வந்திருந்தார்கள். விரைவில் நாங்கள் ஹாங்காங் செல்வதற்கு திட்டமிட்டு இருக்கிறோம் என்று பிரபுதேவா கூறினார்.