தோல்விகள், இயலாமைகள், சறுக்கல்கள், துயரங்கள் எல்லாவற்றுக்கும் காரணங்களை வெளியே தேடுவதும், கண்டுபிடித்துப் பழியை அவர்களிடமோ அவைகளிடமோ போட்டு விட்டு, நம்மைக் குற்றமேதும் அற்றவர்களாய் உணர்வதில் நிம்ம தியடைவதும் பொதுவான மனித இயல்பு.
எங்கள் வெற்றிகளையெல்லாம் எங்களது தோள்களிலேயே ஏந்திக்கொள்ளும் நாம், தோல்வி நெருங்கும்போதே சுட்டுவிரலைத் தயாராக்கிக் கொள்கிறோம், மற்றவர்கள் மீது பழியைப் போட!
நமது செயல்களுக்கான, அதனாலுண்டான விளைவுகளுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அதற்கு மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும். தன்னுள்ளேயே குற்றங்களைத் தவறுகளைத் தேடும் சுயவிமர்சன மனப்பண்பும், அதை வெளிப்படுத்தும் ஓர்மமும் வேண்டும்.
ஆனால் அதன் மூலம்தான் நாம் தவறுகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் மீண்டு வெளியேவர முடியும். நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும் போது தான் நமது அடுத்த நகர்வு வெற்றியை நோக்கியதாக மாற முடியும். தடுக்கி விழுந்ததுக்கு கல்லைத் திட்டிக் கொண்டிருப்போம் என்றால், எழுந்து கவனமாக நடப்பதற்கான உந்துதல் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
உறவுகளுக்குள்ளேயே பார்த்தால் கூட, எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? என் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்? அவர்களைக் குறை கூறும் முன், நானும் இதற்கு ஒரு காரணமா? என நிதானித்தால் போதும். அதுவரை நம் மனதிற்குத் தெரியாத ஏராளம் விஷயங்கள் தெரியவரும்! சட்டென்று மனம் திறந்து கொள்ளும்!
பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன், கோபத்துக்குக் காரணம் மனைவி, ஏமாற்றத்துக்குக் காரணம் மேலதிகாரி, துன்பத்துக்குக் காரணம் பிறரெல்லோரும் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்போம்| சொல்லிக் கொண் டிருக்கிறோம்.
உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம் என்கிறார் ரோல்ப் மார்ஸ்டன் என்ற அறிஞர். தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் யாரைக் குறை சொல்லலாம் என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும் என்கிறார் அவர்.
நமக்குள்ளே தேடி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது வீம்போ, பொறுமையின்மையோ, விளக்கமின்மையோ, பிழையான நம்பிக்கைகளோ எதுவோதான் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! நமது வெற்றி தோல்விக்கான நாணயக்கயிறு பிறரிடமோ, சூழ்நிலையிடமோ இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.
நானே பிரச்சினை எனப் புரிந்து கொள்பவர்கள் என்னால் தான் தீர்வு என்பதையும் அறிந்து கொள்வார்கள்.