பாலியல் வன்கொடுமைக்கு டெல்லியில் மருத்துவ மாணவி பலியான சுவடு மறைவதற்குள், மேற்குவங்கத்தில் நடந்துள்ள இந்த பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜகனாத்பூர் அருகே, கணவனை தேடி வந்த 45 வயதுப் பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது கணவர் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிப் படுகொலை செய்துள்ளது செங்கல் சூளையில் வேலை பார்த்த தமது கணவரைத் தேடி அந்தப் பெண் சென்ற போது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து உயிரிழந்த அந்தப் பெண்ணின் மகன் அலாபாஸ் அலி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், ஆறுபேர் கொண்ட கும்பல் தமது தாயாரை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொன்று விட்டதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையை அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக விஷத்தை வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி விட்டதாக அலாபாஸ் அலி தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
விஷத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒரு நபரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் எட்டுப்பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.