நவம்பர் 27 அன்று சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து உருவாக்கப்பட்ட SupremeSAT 1 எனும் புதிய செய்மதியானது தற்போது அதற்கான சரியான இடத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் யூன் 2013ல் இதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்புதிய செய்மதி அதற்கான சரியான திசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது விண்ணில் தனது செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஆறு மாதங்கள் தேவைப்படுவதாகவும் Supreme குழுவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இந்த செய்மதிக்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையம் தொடர்பில் பல்லேகல விண்வெளி கல்லூரியுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் தொலைத் தொடர்பாடல் அதிகார சபையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் இந்த செய்மதிக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொண்டு திட்டத்தை அமுல்படுத்துவோம்" என விஜித் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படும் வரை, சீனா இதனைக் கண்காணிக்கும் எனவும் பிரதம நிறைவேற்று இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார். செய்மதி தொலைக்காட்சியை சந்தைப்படுத்துவதற்கான திட்டம் தற்போது செயற்பாட்டில் உள்ளதாகவும், ஆசியப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுடன் இச்சந்தைப்படுத்தலுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
"இந்தச் செய்மதியானது 'சிறிலங்காவின் நீள்வட்டப் பாதையைச்' சுற்றி வலம் வருவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது தொலைத் தொடர்பாடல் அதிகார சபையின் அனுமதிக்காக இக்குழுவினர் காத்திருக்கின்றனர்" என நவீன தொழினுட்பங்களுக்கான ஆர்தர் சி.கிளார்க் நிறுவகத்தின் தலைவரும் பேராசிரியருமான லலித் காமேஸ் குறிப்பிட்டுள்ளார்