இமயமலை பகுதியில், கடும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள், பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில்,
இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிக்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவாகியுள்ள போதிலும், பூகம்பம் பெரியளவில் இருக்கவில்லை. இருப்பினும், 1934ல் ஏற்பட்ட பூகம்பத்தில், 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு பூமியில் வெடிப்புகள் ஏற்பட்டன.
ஆறுகளின் வண்டல் படிவம் மற்றும் மலைச்சரிவுகளை, ரேடியோ கார்பனை பயன்படுத்தி, ஆய்வாளர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், இமயமலைப் பகுதியில் முன் ஏற்பட்டது போல், அதிக அதிர்வுடன் கடும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், இமயமலை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தில் பிளவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இது ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.