காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் 8-வது மனைவியை கொடுமைப்படுத்தியவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் பி. லட்சுமி (18), காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார். மனு விவரம் :
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தான்தோன் துரைசாமி மகன் தான்தோன் பாஸ்கரன் (49). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி நோயால் இறந்துவிட்டதாக கூறி, என்னை 15.11.2012 அன்று திருக்கடையூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
கோட்டுச்சேரி அருகேயுள்ள கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வந்தோம். திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து பாலியல் ரீதியாகவும், பல்வேறு வகைகளிலும் என்னை கொடுமைப்படுத்தி, வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில், 20.1.2013 அன்று அங்கிருந்து தப்பித்து, பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
கோட்டுச்சேரி பகுதியில் பாஸ்கரன் குறித்து விசாரித்தபோது, இவர் பல்வேறு பொய்யை கூறி, ஏற்கெனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளதும், அவர்களையும் விரட்டிவிட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து பாஸ்கரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமி அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு, காரைக்கால் மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. புகாரை ஏற்ற மகளிர் பொலிஸார், பாஸ்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, ஏற்கெனவே நடைபெற்ற 7 திருமணங்களை மறைத்து 8-வதாக திருமணம் செய்தது, பெண்ணை கொடுமைப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிந்து, தான்தோன் பாஸ்கரனை கைது செய்தனர்.