பஞ்சாபில் நர்ஸ் ஒருவரை காரில் கடத்திய கும்பல், அவரை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை ரோட்டில் வீசி வீட்டு சென்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இரு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகம் மறைவதற்கு முன் மோகா மாவட்டம் லேண்டேகா கிராமத்தில் மற்றொரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக் கிழமை நேர்முகத் தேர்வுக்கு சென்ற 26 வயது நர்ஸ் ஒருவரை, பஸ் ஸ்டாண்டில் ஒரு கும்பல் காரில் கடத்தியது. விலாசம் கேட்பது போல் நடித்து, அந்தப் பெண்ணை காருக்குள் இழுத்து கடத்திச் சென்றனர். அந்த கும்பலில் பெண் ஒருவரும் இருந்துள்ளார். நர்ஸ்க்கு மயக்க மருந்து கொடுத்து, இரண்டு நாட்களாக 4 பேர் கும்பல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது.
அதன் பின் அந்த நர்ஸை, பதிந்தா பகுதியில் ரோட்டோரம் நேற்று முன்தினம் மாலை தள்ளிவிட்டு, அந்த கும்பல் காரில் தப்பியது. ஆபத்தான நிலையில் கிடந்த நர்ஸை, கார் டிரைவர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். மருத்துவ சோதனையில் நர்ஸ், பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டியாலா, டெல்லியில் நடந்த பலாத்கார சோகம் மறைவதற்குள், மீண்டும் நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.