சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆதம்பாக்கம் திருவள்ளுவர் மெயின் ரோட்டில் உள்ள கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் கடையில் இருந்த நிர்மலாவை ஒரு வாலிபர் திடீரென தாக்கி விட்டு, தன்னிடம் இருந்த ஆசிட்டை எடுத்து அவரது மார்பு, உடல் பகுதிகளில் ஊற்றினார். இதனால் நிர்மலா, வேதனை தாங்காமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பிரவுசிங் சென்டரில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர்.
அவர்கள், ஆசிட் வீசிய வாலிபரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது அவர், 'என்னை ஏமாற்றியதால் ஆசிட் வீசினேன்' என கூறியபடி இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவனேஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
ஆசிட் வீசிய வாலிபரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஆசிட் வீச்சில் உடல் முழுவதும் வெந்த நிர்மலாவை அங்கிருந்தவர்கள் உடலை துணிகளால் மூடியபடியே ஆட்டோவில் ஏற்றி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். போலீசார் பிடிப்பட்ட வாலிபரை ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர் கிண்டி மடுவின்கரை துரைசிங்கபுரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் (32) என தெரியவந்தது. இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆதம்பாக்கத்தில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு வந்தேன். அங்கிருந்த நிர்மலா, என்னிடம் அன்பாக பேசினார். எனவே தினமும் சென்றேன். இதனால் எங்கள் இடையே காதல் மலர்ந்தது. என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? எனக்கேட்டேன். அதற்கு நிர்மலா, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறினார்.
அதன்பிறகு பகல் நேரத்தில் தினமும் பிரவுசிங் சென்டருக்கு வருவேன். அங்கு நானும், நிர்மலாவும் ஜாலியாக இருப்போம். பல இடங்களுக்கு செல்வோம். உயிருக்கு உயிராய் காதலித்து வந்த நாங்கள், திருமணம் செய்ய முடிவு செய்தோம். நிர்மலா வீட்டிற்கு எனது பெற்றோர் சென்று பெண் கேட்டனர். அப்போது அவர்கள், என்ன சொன்னார்கள்? என்பது பற்றி எனக்கு தெரியாது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நிர்மலா, என்னிடம் சரியாக பேசுவது இல்லை. பிரவுசிங் சென்டருக்கு சென்றால் வெளியே வந்து நின்று கொள்வார். இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இதுபற்றி நிர்மலாவிடம் கேட்டதற்கு 'உன்னை திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நீ வேறு பெண்ணை திருமணம் செய்துகொள். என்னை தொல்லைப்படுத்தினால் போலீசில் புகார் செய்து சிறையில் அடைப்பேன்' எனக்கூறினார். இது எனக்கு வெறியை ஏற்படுத்தியது.
இதனால் இன்று (நேற்று) வேலைக்கு செல்லவில்லை. நேராக மதுபான கடைக்கு சென்று ஒரு பீர் வாங்கினேன். மனவேதனையால் பாதி பாட்டில் பீரை அருந்திவிட்டு, நேராக பிரவுசிங் சென்டருக்கு சென்றேன். அங்கிருந்த நிர்மலாவின் ஆடைகளை கிழித்து, என்னிடம் இருந்த ஆசிட்டை அவர் மீது ஊற்றினேன். உடனே அங்கிருந்தவர்கள் என்னை தாக்கினார்கள். பின்னர் போலீசில் ஒப்படைத்து விட்டனர்.
யாரும் வராவிட்டால் நிர்மலாவை கொன்றுவிட்டு, நானும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பேன். இதுவே நாங்கள் (ஆண்கள்) ஒரு பெண்ணை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்து விடுவீர்கள். ஆனால் ஒரு பெண், காதலித்து ஏமாற்றினால் மட்டும் புகாரை வாங்கமாட்டீர்கள். ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயமா?.
என்னை வெளியே விட்டால் அந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 'தேவதையை கண்டேன்' என்ற படத்தில் நடிகை ஸ்ரீதேவி, நடிகர் தனுசை காதலிப்பார். பின்னர் அவரை திருமணம் செய்ய முடியாது என கூறி விடுவார். இதனால் நடிகர் தனுஷ், தனது காதலியை (ஸ்ரீதேவி) கோர்ட்டுக்கு இழுத்து நியாயம் கேட்பது போல படம் அமைந்திருக்கும்.
அந்த படத்தில் வரும் கருவை போல், இந்த சம்பவம் நடந்ததால் ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
0 கருத்து:
கருத்துரையிடுக