கற்பழிப்பு குற்றங்களுக்கு சினிமா காரணம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-
மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது.
இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது.
திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர்.
சினிமா காட்சிகளை வரை முறைபடுத்த திரைப்பட தணிக்கைகுழு உள்ளது. படங்களுக்கு அவர்கள் தரங்களை நிர்ணயித்து சான்றிதழ் அளிக்கின்றனர். ‘யு’ சான்றிதழ், வரிவிலக்கு போன்றவை அளித்து நல்ல படங்களை ஊக்குவிக்கின்றனர்.
குழந்தைகள் எந்த படங்கள் பார்க்கலாம் என அனுமதி அளிப்பதில் பெற்றோருக்கு பொறுப்பு இருக்கிறது. சில படங்களை பெற்றோருடன்தான் பார்க்க வேண்டும் என்று ‘யு/ஏ’ சான்றிதழ் அளிக்கின்றனர். எனவே தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி சினிமா மேல் பாய்கிறார்கள்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.