கர்ப்பவதிகள் சும்மாவே சோம்பியிருக்ககூடாது. முடிந்த அளவுக்கு, வீட்டுவேலைகள் செய்து வரலாம். கர்ப்பிணிகள் ஒருசில உடற்பயிற்சிகள் செய்துவந்தால், பிரசவம் எளிமையாக
இருக்கும்.இதுதவிர உடல்-மனதுக்கு இதமளிக்கும் எளிய பயிற்சியாகவும் அமையும். கர்ப்பகால உடற்பயிற்சிகளில் ஒன்றிரண்டு அம்சங்களை இப்போது பார்ப்போம்:
* கால்களை மடக்கி, வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். மூக்கின் வழியே காற்றை இழுத்து, வாய் வழியே ஊதி வெளியேற்றவும். இத்தகைய சுவாசபயிற்சி, பிரசவகால டென்ஷன்-பயத்தை குறைக்கும். தசைகள் இறுகி போவதை தவிர்க்கும். மனஅழுத்தம் வராமல் காக்கும்.
* கர்ப்ப காலத்தில் வயிறு பெருத்துக்கொண்டே போவதால், வயிறு முன் பக்கமும், உடலின் மற்ற பாகங்கள் பின் பக்கமுமாக வளைந்திருக்கும். இத்தகைய நிலை தவறானது. ஒரு சுவரை ஒட்டியபடி நிற்கவும். கைகளை பக்கவாட்டுக்கு கொண்டு வாருங்கள். தோள்பட்டைகள், சுவரை அழுத்தட்டும். உடம்பின் எடை முன்பக்கம் தாங்குமாறு நில்லுங்கள். இப்படியாக தினமும் செய்துவந்தால், முதுகு வலி-கால் வீக்கம் வராது.
* இது சுகப்பிரசவத்துக்கான பயிற்சி. உட்கார்ந்த நிலையில் கால்களை விரித்து, இரண்டு பாதங்களையும் சேர்த்தபடி, 10 முதல் 15 வரை எண்ண வேண்டும். இத்தகைய பயிற்சி, பிரசவ நேரத்தில் குழந்தையை வெளியே தள்ளும்போது வலி தெரியாமல் இருக்க உதவும்.
* இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. ஆங்கிலத்தில் `கெகல் பயிற்சி' என்று பெயர். அதாவது சிறுநீர் கழிக்கும் பாதையை இறுக்கி, 5 வரை எண்ணி, பிறகு தளர்த்த வேண்டும்.இதை சிறுநீர் கழிக்கும் போதும், பாதியில் நிறுத்தி பரிசோதித்து பார்க்கலாம். இடுப்பெலும்பு-சுற்றுப்புற அங்கங்களுக்கு, யானை பலம் தரும் அருமையான பயிற்சி இது!
* முட்டிகளை மடக்கி, இடுப்பை மட்டும் லேசாக மேலே உயர்த்தி 10 எண்ண வேண்டும். இதற்கு `பெல்விக் பிரிட்ஜிங்' என்று பெயர். இடுப்புத் தசைகளை பலப்படுத்தி, பிரசவ வலியை எதிர்கொள்ளும் ஆற்றல் தரும் அருமையான பயிற்சி.
* படுத்துக்கொண்டோ, சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ கால்களை நன்கு நீட்டவும். அடுத்தபடியாக பாதங்களை மட்டும் முன் பக்கமாகவும், பிறகு பின்பக்கமாகவும் வளைக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை சீராக்கி, கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் நரம்பு சுற்றிஇழுக்கும் பிரச்னைகளை தவிர்க்கும்.
* முதலில் கவிழ்ந்து, முட்டிபோட்டு நிற்கவேண்டும். அடுத்தபடியாக தரையை பார்த்தவாறு மூச்சை உள்வாங்கி, முதுகை மட்டும் மேலே தூக்கவேண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டு, தலையை தூக்கி முதுகை உள்வாங்கவேண்டும். இப்படியாக தினந்தோறும் 5 முறை செய்துவந்தால் கர்ப்பிணிகளின் முதுகுதண்டு பலமாகும்.
முதுகு வலி ஏற்படாது. கருவுக்கும் நன்மை கிட்டும். நடப்பதை ஓர் உடற்பயிற்சியாக பரிந்துரைக்கலாம். நடைபயிற்சியின் மூலம் உடல் எடை கட்டுப்படும். இதுதவிர குழந்தை பிறப்பின்போது உபயோகப்படும் தசைகள் வலுவாகும். ரத்தஓட்டமும் அதிகப்படும்.
0 கருத்து:
கருத்துரையிடுக