நான்கு மனைவிகளுடன் நிம்மதியாக வாழ முடியாமல், கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த நபர் ஒருவர் தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம்,
காலிமனையில் உள்ள கிரானைட் ஸ்டோன் கிரேன் கம்பியில், ஒரு ஆணும், மூதாட்டியும் நேற்று அதிகாலை, தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கினர்.
அப்பகுதி மக்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த, புஞ்சம்மா, 65, அவரது மகன் சின்னா, 42, என்பது தெரிந்தது.
திருப்பதியில், ஆட்டோ டிரைவராக பணிபுரிந்தார் சின்னா. மூன்று பெண்களை திருமணம் செய்த இவர். அவர்களுடன் சண்டையிட்டு பிரிந்து வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பஸ்தியில், ராயக்கோட்டையை சேர்ந்த பத்மா என்பவரை காதலித்து, நான்காவது திருமணம் செய்து கொண்டார்.
பத்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து சின்னா, தாய் புஞ்சம்மாவுடன் மீண்டும் திருப்பதி சென்றார்.
அங்கு, சின்னாவுக்கு கடன் சுமை அதிகரிக்கவே, ஆட்டோவை விற்று, சில நாட்களுக்கு முன், தாயுடன் ஓசூர் பஸ்தி வந்தார். பத்மாவிடம் மீண்டும் அடைக்கலம் கேட்டதற்கு, இருவரையும் வீட்டில் சேர்க்க அவர் மறுத்தார்.
வசிக்க இடம் இல்லாமலும், சாப்பிட பணம் இல்லாமலும், இரு நாட்களாக பரிதவித்த இருவரும், நேற்று முன்தினம் இரவு, ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி சென்றனர். அங்கு, காலி மனையில் நின்ற கிரானைட் ஸ்டோன் கிரேனில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சின்னாவின் சட்டை பையில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: மனைவிகளுடன், நிம்மதியாக வாழ முடியவில்லை. கடன்காரர்கள், கடனை கேட்டு துரத்துகின்றனர். உயிர் வாழவும் யாரும் அடைக்கலம் கொடுக்கவில்லை; பெற்ற தாயை காப்பாற்ற முடியவில்லை; வாழவே பிடிக்கவில்லை.
அதனால், இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.