புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனயீனத்தினால், அண்மைக் காலங்களில்  குடாநாட்டில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.


அண்மையில் மல்லாகப் பகுதியில் 19 வயது இளைஞன் செல்வராஜா செந்தூரன் மின் கம்பத்திற்கு இடையாக இருந்த மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டார்.

அதன்போது, தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மரக்கிளைகளை வெட்டுகின்ற பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும், மறுபகுதியில் இருந்து வந்த இணைப்பினால் ஏற்பட்ட மின்தாக்கத்தில் குறித்த இளைஞனின் வலக்கை கருகிய நிலையில் கம்பத்தில் இருந்து வீழ்ந்து தலைப்பகுதி அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரக்கிளைகளை வெட்டும் போது அதிகாரிகள் இரு பக்கத்திற்குரிய மின் இணைப்புகளை துண்டித்திருக்க வேண்டும். ஒரு பகுதியில் உள்ள மின் மாத்திரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மற்றைய பகுதி துண்டிக்கப்படாத காரணத்தினால் குறித்த இளைஞனின் உயிரிழப்பு நடைபெற்றுள்ளது.

மேலும் கம்பத்தில் ஏறும்போது பட்டி அணியப்பட வேண்டும். தலைக்கவசம் அணியப்பட வேண்டும் போன்ற நடைமுறைகளை அதிகாரிகள் கவனம் செலுத்தாத காரணத்தினால் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.

மரக்கிளைகளை வெட்டுவதற்கு கம்பத்தில் ஏற வேண்டிய தேவை இல்லை என்று மின்சார சபைப் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருந்தும் மரக்கிளைகளை, படரிகளை வெட்டுவதற்கு கம்பத்தில் ஏறும் போது கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பாதுகாப்பு நிலைகளை உறுதிப்படுத்துவதில் தவறிவிட்டார் என்று கருதப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனத்தால் இறந்துள்ள சம்பவம் வடமாகாணத்தில் நடைபெற்றுள்ளது.

கவனயீனங்கள் மூலம் இவ்வாறான உயிரிழப்புக்கள் தடுக்கப்படுவதற்கு மின்சார சபை அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து இந்நிலையில் உயிர்கள் காவுகொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாதெனவும் சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
 
Top