புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பொலிஸாரினால் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அங்கிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் கூறுகின்றன.அவர்கள் பொலிஸாரினால், உடல்
ரீதியாக துன்புறுத்தப்படுவதுடன், தாக்கப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாகவும், அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பலவந்தமாக எச் ஐ வி சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் பாலியல் தொழிலாளர்கள், மீள் கல்வி முகாம்களுக்கு பலவந்தமாக அனுப்பப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.சீனாவைப் பொறுத்தவரை அங்கு விபச்சாரம் சட்டவிரோதமானதாகும்.

அந்தத் தொழில்துறையை பூண்டோடு ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டு அரசாங்கமும் பொலிஸாரும் கூறிவருகின்றனர். ஆனால்,அதற்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பாலியல் தொழிலாளர்களை மேலும் பலவீனமாக்கி விடுகின்றன.

பாலியல் தொழிலாளர்கள், அவர்களது வாடிக்கையாளர்கள், பொலிஸார், துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் 140 செவ்விகளை அடிப்படையாகக் கொண்டு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் அறிக்கை வந்திருக்கிறது.

தம்மை மரங்களில் கட்டி வைத்து அடிக்கும் பொலிஸார், தம்மீது குளிர் நீரை ஊற்றி சித்ரவதைகளைச் செய்து, குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை பலவந்தமாகப் பெறுவதாகவும், குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்து வைத்தால் போதும் தாம் விடுதலை செய்யப்படுவோம் என்று கூறும் பொலிஸார், வாக்கு மூலம் பெற்ற பின்னர் அதனை வைத்து தம்மை அடைத்து வைத்து 6 மாதங்களுக்கு மீள் கள்வி முகாம்களுக்கு அனுப்புவதாகவும் பாலியல் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். அதேவேளை பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பொலிஸார் செவி சாய்ப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன.

தாம் பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும், அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய தாம் பயப்படுவதாக பாலியல் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். தாம் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்தால், பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அதற்காக தாம் கைது செய்யப்படக் கூடும் என்ற அஞ்சுவதாக பாலியல் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

பாலியல் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது சில நேரங்களில் பொலிஸார் பாலியல் தொழிலாளர்களிடம் இருந்து பணம் பிடுங்குவதாகவும், அவர்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

சில சமயங்களில் பொலிஸார் தாமே பாலியல் தொழிலாளர்களிடம் வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்து, வாடிக்கையாளர்கள் பாலியல் தொழிலாளியுடன் இருக்கும் போது அங்கே வந்து, அவர்களைக் கைது செய்து, பாலியல் தொழிலாளியான பெண்ணிடம் பணத்தை பறித்து, அதை பொலிஸ்காரரும், அந்த வாடிக்கையாளரும் பகிர்ந்து கொள்வதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில பெண்கள் ஆணுறைகளை தம்மிடம் வைத்திருந்ததற்காகவே கைது செய்யப்பட்டு அதனை ஆதாரமாகக் காண்பித்து தண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதனால், பாலியல் தொழிலாளர்கள் தம்முடன் ஆணுறைகளை எடுத்துச் செல்வதில்லை. இது எயிட்ஸ் நோய் பரவுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

இரு தரப்பு ஒப்புதலுடனான பாலியல் தொழில் மீதான கிரிமினல் மற்றும் நிர்வாகத் தடையை ரத்துச் செய்யுமாறு இந்த அறிக்கை சீன அரசாங்கத்தை கேட்கிறது. பாலியல் தொழிலுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து நடத்தும் பிரச்சார நடவடிக்கைகள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை அதிகரிக்கும் என்பதால், அத்தகைய நடவடிக்கைகளை சீன அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கேட்டுள்ளது.

ஐநாவின் மதிப்பீடுகளின்படி சீனாவில், நாற்பது லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகின்றது.
 
Top