குழந்தையை பிரிந்து இருந்த ஏக்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் ஜங்சன் ரயில்நிலையம் 4வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். ரயில்வே காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்தார்.
விசாரணையில், அந்தப் பெண் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜனனி என்பது தெரியவந்தது. டாக்டரான அவர் சேலம் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி., படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கணவர் சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நிகிலா ரம்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
சேலம் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, ஜனனி ஏன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.
எம்பிபிஎஸ் முடித்த ஜனனி, எம்.டி படிப்புக்காக சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதற்காக அவரது குழந்தையை பிரிந்து சேலத்தில் அறை எடுத்து தங்கினார். ஆனால் குழந்தையின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரால் சரியாக படிக்க முடியவில்லை.
இதன் காரணமாக அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். என்றாலும், டாக்டர் ஜனனி, சேலம் ரயில்நிலையம் வந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் டிக்கெட் தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியுள்ளார். எனவே, அவருடன் தோழியர் யாராவது வந்தார்களா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.