ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ராஞ்சியில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச
முடிவு செய்தது. முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் அணிக்கு, விக்கெட் கீப்பர் உத்தப்பாவும், கேப்டன் ஆரான் பிஞ்சும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். உத்தப்பா 21 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட பிஞ்ச், 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார்.
இவர்கள் பெவிலியன் திரும்பிய பிறகு அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய மணீஷ் பாண்டே, 47 பந்துகளில் 66 ரன்கள் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங், 20 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியின் துவக்க விக்கெட்டுகள் விரைவில் சரிந்தன. காம்பிர் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 4-வது வீரராக களமிறங்கிய யூசுப் பதான், புனே பந்துவீச்சை நேர்த்தியாக சமாளித்து ஆட்டத்தை தன்பக்கம் திருப்பினார். விரைவில் அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த அவருடன், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த டென் டஸ்கதே தன் பங்களிப்பை சிறப்பாக செய்தார்.
இந்நிலையில் 16-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 127 இருந்தபோது டென் டஸ்கதே ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மனோஜ் திவாரி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுமுனையில் யூசுப் பதான் நிச்சயம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை வீணடித்து வெளியேறினார் யூசுப் பதான். 18-வது ஓவரில் பார்னெல் வீசிய பந்தை தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார் பதான். அப்போது பாய்ந்து வந்த பந்தை எடுக்க பார்னெல் முயன்றபோது, அவர் கைக்கு கிடைக்காத வகையில், பந்தை காலால் தட்டிவிட்டு சென்றார். இதனால் பதான் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார். அவர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் சேர்த்தார். அப்போது அணியின் ஸ்கோர் 148.
அதன்பின்னர் 13 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. பாண்டேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.