குளிக்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்து அடித்து கொன்ற மர்ம ஆசாமி, கிணற்றுக்குள் சடலத்தை வீசிவிட்டு தப்பினான். மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சின்னவண்டாரி கிராமத்தை
சேர்ந்தவர் வைரமணி, விவசாயி.
இவரது மனைவி முத்துலட்சுமி (37). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் பேரையூர் அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ளது. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டத்தில் தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். அங்குள்ள வீட்டிலேயே குடும்பத்துடன் தங்கி பயிர்களை காவல் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு, வேலை முடிந்ததும் தோட்டத்து கிணற்றில் குளித்து விட்டு வருவதாக மகளிடம் கூறிவிட்டு சென்றார் முத்துலட்சுமி. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. பதற்றமடைந்த முத்துலட்சுமியின் மகள், செல்போனில் அப்பாவுக்கு தகவல் தெரிவித்தார்.
வைரமணி மற்றும் உறவினர்கள் முத்துலட்சுமியை தீவிரமாக தேடினர். அப்போது கிணற்றுக்குள் முத்துலட்சுமி பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றின் அருகே ரத்தக்கறை படிந்த உருட்டுக்கட்டை கிடந்தது.
தகவலறிந்து வந்த சாப்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முத்துலட்சுமியின் தலை, கன்னம், நெற்றி ஆகிய இடங்களில் காயம் இருந்தது. அவரை யாராவது பலாத்காரம் செய்து, அடித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.